ADVERTISEMENT

ரேஷன் அரிசி கடத்தினால் குண்டர் சட்டம் பாயும்! ஆட்சியர் கடும் எச்சரிக்கை! 

08:25 AM Jun 29, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT



ரேஷன் அரிசி கடத்துவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் எச்சரித்துள்ளார்.

ADVERTISEMENT

தமிழகத்தில் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் விலையில்லா அரிசியும், மானிய விலையில் பருப்பு, சர்க்கரை, பாமாயில், கோதுமை, மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பண்டங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

பெரும்பாலான கார்டுதாரர்கள், ரேஷன் அரிசியை வாங்கி, அதை வெளிச்சந்தையில் கிலோ 2 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை விற்பனை செய்து வருகின்றனர். அரிசி வாங்க விருப்பம் இல்லாத கார்டுதாரர்களிடம் பேசி, அவர்களின் ஒப்புதலுடன் ரேஷன் ஊழியர்களே அரிசியை வெளிச்சந்தைக்கு கடத்தும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

ரேஷன் அரிசியை கள்ளச்சந்தையில் வாங்கும் கும்பல், அதை அரைத்து இட்லி மாவு விற்பனை செய்யும் கடைகளுக்கும், உணவகங்களுக்கும் கொள்ளை விலைக்கு விற்று லாபம் பார்க்கின்றனர். கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கும் கால்நடைத் தீவனத்திற்காக கடத்தி விற்கின்றனர்.

இந்நிலையில், ரேஷன் அரிசி கடத்தலை ஒடுக்க தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இக்குற்றத்தில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் வரை பாயும் எனவும் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, சேலம் மாவட்டத்தில் 1156 முழுநேர ரேஷன் கடைகளும், 445 பகுதி நேர ரேஷன் கடைகளும் என மொத்தம் 1601 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. சில கடைகளில், ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறையால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

அரிசி விநியோகத்தில் ரேஷன் கடை விற்பனையாளர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டாலோ, அரிசி கடத்தலுக்கு துணை போனாலோ அவர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், அத்தியாவசிய பண்டங்கள் சட்டம் 1955ன் படி, குற்றவியல் நடவடிக்கையோடு, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ரேஷன் கார்டுதாரர்கள் தங்களுக்குரிய அரிசியை ரேஷன் கடையில் இருந்து பெற்று வெளிச்சந்தையில் விற்பனை செய்தால், அவர்களின் கார்டுகள் ரத்து செய்யப்படும். இவ்வாறு சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT