ADVERTISEMENT

கடல் பாசி எடுக்கச் சென்ற பெண் மரணம்! வடமாநில தொழிலாளர்களைத் தாக்கிய கிராமத்தினர்!  

11:56 AM May 25, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்தில் அமைந்துள்ளது வடகாடு மீனவர் கிராமம். இந்தக் கிராம மக்களின் பிரதான தொழில் மீன்பிடிப்பு மற்றும் கடல் தொடர்பானதாக இருக்கிறது. இந்தக் கிராம மக்கள் கடல் பாசி சேகரிக்கும் தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

வடகாடு கிராமம் பகுதியில் வசித்துவருபவர் பாலு. இவரது மனைவி சந்திரா. சந்திரா அவ்வப்போது கடல் பாசி சேகரிக்க கடலுக்கு செல்வது வழக்கம். எப்போதும் காலையில் சென்று மாலையில் சந்திரா வீடு திரும்புவார். அதுபோல், நேற்று காலை கடல் பாசி சேகரிக்க சந்திரா வீட்டைவிட்டு கிளம்பியுள்ளார். ஆனால், எப்போது போல் மாலை அவர் வீடு திரும்பவில்லை. இதனால், பதட்டமான அவரது கணவர் பாலு, தனது உறவினர்களுடன் பல்வேறு இடங்களிலும் தேடியுள்ளார்.


இந்நிலையில் நேற்று இரவு 10.30 மணி அளவில் வடகாடு அருகில் உள்ள நரிக்குழி என்ற இடத்தில் சந்திரா இறந்த நிலையில் இருந்ததை கண்டறிந்துள்ளனர். மேலும், அவர் இறந்திருந்த இடத்திற்கு அருகில் முனியசாமி என்பவருக்கு சொந்தமான இறால் பண்ணை செயல்பட்டுவருகிறது. அதில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் 6 பேர் மீது பாலு உறவினர்களுக்கும், வடகாடு கிராம மக்களுக்கும் சந்தேகம் ஏற்பட்டு, அவர்களை தாக்கியுள்ளனர். மேலும், அந்த இறால் பண்ணையின் சில பகுதிக்கும் கிராம மக்கள் தீவைத்தனர்.

இந்தத் தகவல் காவல்துறையினருக்கு தெரியவரவே, உடனடியாக அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வடமாநில ஆறு பேரையும் மீட்டு, பற்றிய தீயையும் அணைத்தனர். மீட்கப்பட்ட ஆறு பேரையும் காவல்துறையினர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இறந்த சந்திராவின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்த வழக்கில் குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி இராமேஸ்வரம் - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அக்கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT