ADVERTISEMENT

ராமேஸ்வரம் மீனவர்களின் உண்ணாவிரதம் வாபஸ்!

05:34 PM Feb 25, 2024 | prabukumar@nak…

தமிழக கடலோரப்பகுதிகளில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்யும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றன. கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதைக் கண்டித்து காலவரையறையற்ற போராட்டம் நடத்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர் சங்கங்கள் சார்பில் கடந்த 17 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்திருந்தனர்.

ADVERTISEMENT

அதன்படி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் மீனவர்களுக்கு சிறைத்தண்டனை வழங்குவதைக் கண்டித்தும், மீனவர்களின் படகுகள் நாட்டுடைமையாக்கப்படுவதைக் கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் 700க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 18 ஆம் தேதி முதல் காலவரையறையற்ற போராட்டத்தைத் தொடங்கினர். மீனவர்கள் தங்களது படகுகளில் கருப்புக் கொடி கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். மேலும் ராமேஸ்வரம் அருகே உள்ள தங்கச்சி மடத்தில் மீனவர்கள் கடந்த இரு தினங்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்தனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் தங்கச்சி மடத்தில் மீனவர்கள் நடத்தி வந்த உண்ணாவிரதப் போராட்டம் நடந்த இடத்திற்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் வருகை தந்தார். அப்போது அவர், “இலங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை மீட்க சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் மீனவர்கள் சந்திக்க ஏற்பாடு செய்யப்படும்” என மீனவர்களிடம் உறுதியளித்தார். மேலும் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை மீனவர்கள் வாபஸ் பெற்றுக் கொண்டனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT