ADVERTISEMENT

தேவகௌடா உறவினர் பெண்ணிடம் அத்துமீறல்! சிக்கலில் ரமணர் ஆஸ்ரமம்! 

10:44 AM Jun 11, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கர்நாடக மாநிலம் பசவனகுடி பகுதியைச் சேர்ந்தவர் சுனிதா திமே கௌடா. திருவண்ணாமலை நகரக் காவல் நிலையத்தில் ரமணர் ஆசிரம நிர்வாகிகள் மீது பரபரப்புக் குற்றஞ்சாட்டி புகார் தந்துள்ளார். புகார் குறித்து அவரிடம் கேட்டபோது, "முன்னாள் பிரதமர் தேவகௌடா, நடிகர் ராஜ்குமார் குடும்பத்தின் உறவினர் நான். என் கணவர் அசோஷ் ஷங் சொந்தமாக பிசினஸ் செய்துக்கிட்டு இருக்கார். நான் 2010ஆம் ஆண்டு முதல் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், பௌர்ணமியன்று அன்னதானம் செய்துவந்தேன்.

2015ஆம் ஆண்டு ரமண மகரிஷி ஆஸ்ரம நிர்வாகி சிவதாஸ் கிருஷ்ணன், கண்ணன், தன்னார்வலர்கள் ஜெயந்தி பிரேம்குமார், பிரேம் குமார் ஆகியோர் என்னைச் சந்திந்து, 'நீங்க ஏன் ஏதோ ஒரு இடத்திலருந்து அன்னதானம் செய்றீங்க? ஆஸ்ரமத்தில் இருந்தே அன்னதானம் செய்ங்க. உங்களுக்குத் தேவையான உதவிகளை நாங்க செய்யறோம்'னு சொன்னாங்க. என்னோட உதவியாளர் ஸ்ரீகாந்த் குல்கர்னி மூலமாக 15 லட்சம் பணம் தந்து 2015ஆம் ஆண்டு தீபத் திருவிழாவின்போது சமையல் செய்ய பெங்களுரூவில் இருந்து 50 சமையல்காரர்களை அழைத்துவந்து 15.11.2015, 22.11.2015ஆம் தேதிகளில் 2 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினேன். 22-4-2016 அன்று, அன்னதானத்துக்கு பெங்களூருவிலிருந்து பிராமண சமையல் மாஸ்டர்களை அழைத்து வரச்சொன்னார் சிவதாஸ் கிருஷ்ணன். அதன்படி அழைத்து வந்தேன். அதில் 25 பேரை, "கறுப்பாயிருக்காங்க, பூணூல் போடலை'ன்னு சொல்லித் திருப்பி அனுப்பிட்டார்.

பக்தர்களுக்கு வழங்குவதற்காக லட்டு, குலாப் ஜாமூன் செய்தார்கள். "இதெல்லாம் எதுக்கு? இவ்ளோ ஏன் செய்தீங்க?'ன்னு காலால் எட்டி உதைச்சி நாசமாக்கினார். "ஏன் இப்படி நடந்துக்கறீங்க'ன்னு கேட்டதுக்கு, "இங்க பூணூல் போட்டவங்கதான் சமையல் செய்யணும், மத்தவங்க செய்றதை ஏத்துக்க முடியாது'ன்னு சொன்னார். அவருடைய தவறுக்காக மன்னிப்பு கேட்கச் சொன்னபோது, என்னை, "ரவுடிகளை வைத்து கொலை செய்துவிடுவதாக'க் கூறி மிரட்டினார். அடுத்ததாக, 3-5-2016ஆம் தேதி, ஆஸ்ரமத்துக்கு வெளியே சாலையோரம் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யவிடாமல் என்னை சிவதாஸ் கிருஷ்ணன் மிரட்டியதால் பயந்துகொண்டு ஊருக்கு போயிட்டேன்.

சுனிதா திமே கௌடா

பின்னர், அதுகுறித்து 25-6-2016ஆம் தேதி திருவண்ணாமலை காவல்நிலையத்தில் புகாரளித்தேன். அதையடுத்து, சமையல் இன்சார்ஜ் கண்ணன் மட்டும் மன்னிப்புக் கடிதம் எழுதித்தந்தார். ஆஸ்ரம அன்னதானத்துக்காகக் கொடுத்த 30 லட்ச ரூபாயில் பெரும்பகுதியை, என் உதவியாளர், சிவதாஸ் கிருஷ்ணன், ஜெயந்தி பிரேம் குமார், பிரேம்குமார் ஆகிய நால்வரும் கையாடல் செய்தது குறித்து மாவட்டக் குற்றப்பிரிவில் புகாரளித்த வழக்கு அப்படியே இருக்கு.

கடந்த 2022 மே 5-ஆம் தேதி ரமணர் சமாதிக்கு வந்தபோது, அங்குள்ள சன்னதியில் மணி அடிக்கும் சுகுமார், என்னை சிவதாஸ் கிருஷ்ணன் வெளியே தள்ளச் சொன்னதாகக்கூறி செக்யூரிட்டியை வைத்து என்னை வெளியே தள்ளினார். அது மட்டுமல்லாமல், சுகுமார் திடீரெனத் தன்னோட ஆடைகளைக் களைந்து நின்றதும் அதிர்ச்சியான நான் பயந்து வெளியே வந்துட்டேன். அதேபோல், "எத்தனை முறை சொல்றது? எதுக்குடீ வர்ற" என்று சாதிரீதியாகவும் என்னை இழிவாகத் திட்டினார். ஆஸ்ரமத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பயன்பாடு இருக்கிறது. நிறைய மோசடிகள் நடக்கின்றன. அவற்றை நேர்மையாக விசாரித்தால் இன்னும் பல விவகாரங்கள் வெளியே வரும்'' என்றார்.

இவ்விவகாரம் குறித்து திருவண்ணாமலை மாவட்ட சி.பி.எம். வழக்கறிஞர் அபிராமன் மூலமாகக் காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டுள்ளது. வழக்கறிஞர் அபிராமன் நம்மிடம், "ரமணர் ஆஸ்ரமத்தின் பெரும்பகுதி புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பே அதுகுறித்து பிரச்சனை எழுந்தபோது, ஆக்கிரமித்த இடத்துக்குக் குறைந்தளவு பணம் கட்டி வருவாய்த்துறையில் இருந்து கல் கிரய பட்டாவை வாங்கினார்கள்.

அந்த பட்டா பெறுபவர்கள் கிளினிக் நடத்தவேண்டும் என்கிற விதி இருப்பதால் கிளினிக் ஒன்றை நடத்துகிறார்கள். அங்கு சில குற்றச் சம்பவங்கள் நடக்கிறது என்று சொல்வார்கள், அது இப்போது வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் அப்பெண்மணிக்கு நியாயம் கிடைக்கும் வரை சட்டரீதியாகப் போராடுவோம்'' என்றார்.

புகார் குறித்து விளக்கம் பெற ரமணர் ஆஸ்ரமத்துக்குச் சென்றோம். இதுகுறித்து பேச முடியாதென்று நிர்வாகி சிவதாஸ் கிருஷ்ணன் சொன்னதாக அலுவலகத்தில் கூறினர். ரமணர் துறவியாக வலம்வந்தபோது அவருக்கு பக்தர் ஒருவர் தானமாக வழங்கிய இடம்தான் இது. அதில் ஆஸ்ரமம் தொடங்கி நிர்வாகத்தைத் தனது தம்பி நிரஞ்சானந்தாவிடம் ஒப்படைத்தார் ரமணர். நிரஞ்சானந்தா மறைவுக்குப் பின் அவரது மகன் வி.எஸ்.ரமணன் ஆசிரம தலைவரானார். 2020-ல் அவர் இறந்தபின் அமெரிக்காவில் மருத்துவராகவுள்ள அவரது மகன் வெங்கட் தலைவராக இருக்கிறார். குடும்பத்துடன் வெளிநாட்டில் வசிப்பதால் ஆஸ்ரம நிர்வாகத்தினை சிவதாஸ் கிருஷ்ணனிடம் ஒப்படைத்துள்ளார். இப்போது இவரது நிர்வாகத்தின் மீதுதான் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன. மேலிடத்துச் செல்வாக்கால் அனைத்தும் கிடப்பில் போடப்படுவதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT