ADVERTISEMENT

இந்திய இறையாண்மை மீதான தாக்குதல்! இலங்கை அரசுக்கு ராமதாஸ் கண்டனம்

04:40 PM Oct 17, 2018 | rajavel



தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்ட விவகாரத்தில் இலங்கை அரசை இந்தியா கடுமையாக எச்சரித்து அந்நாட்டு சிறைகளில் வாடும் தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க வலியுறுத்த வேண்டும் என்று கூறியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், மீனவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது இந்திய இறையாண்மை மீதான தாக்குதல் என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ADVERTISEMENT

வங்கக் கடலில் மீன்பிடிக்கச் சென்ற இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீது சிங்களப் படையினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி விரட்டியடித்துள்ளனர். அதுமட்டுமின்றி, எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்ததாகக் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் 8 பேருக்கு இலங்கை நீதிமன்றம் தலா 3 மாதங்கள் சிறை தண்டனையும், ரூ.60 லட்சம் அபராதமும் விதித்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது.

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான கடல் பரப்பு மிகவும் குறைவானது என்பதால் இரு நாட்டு மீனவர்களும் பரஸ்பரம் எல்லை தாண்டி மீன் பிடிப்பது தவிர்க்க முடியாதது; அதுமட்டுமின்றி கச்சத்தீவையொட்டிய கடல் எல்லையில் மீன்பிடிப்பது தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமையும் ஆகும். ஆனால், இவை எதையுமே மதிக்காத இலங்கை அரசு கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை சிங்களப் படை மூலம் கைது செய்து சிறைகளில் அடைப்பது, படகுகளை பறிமுதல் செய்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இது இருதரப்பு ஒப்பந்தத்திற்கு எதிரானதாகும்.

தமிழக மீனவர்களுக்கு எதிராக இத்தகைய கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அடித்தளம் அமைத்தது இராஜபக்சே அரசு ஆகும். 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ‘‘நீடித்த வளர்ச்சிக்கான இயற்கை வளங்களை எப்படி பாதுகாப்பது?’’ என்ற தலைப்பிலான மாநாட்டில் பேசிய அப்போதைய இலங்கை அதிபர் ராஜபக்ச, ‘‘தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லையில் புகுந்து மீன் வளங்களையும், கடல் செல்வங்களையும் கொள்ளையடிக்கிறார்கள். அவர்களை பன்னாட்டு கடல் சட்டப்படி கைது செய்து 20 ஆண்டுகள் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று எச்சரித்தார். அதன்பிறகு தான் மீனவர்களை கைது செய்து 3 மாதங்கள் சிறையில் அடைப்பது, படகுகளை பறிமுதல் செய்வது போன்ற செயல்களில் இலங்கை ஈடுபட்டு வருகிறது. இதனால் தமிழக மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

வங்கக் கடலுக்கு ஒவ்வொரு முறை மீன்பிடிக்கச் செல்லும் போதும் தமிழக மீனவர்கள் சிங்களப் படையினரால் கைது செய்யப்படுவது வாடிக்கையாகி விட்டது. தமிழக மீனவர்கள் 3 மாதங்களுக்கு சிறையில் அடைக்கப்பட்டால் அந்தக் காலத்தில் மீனவர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் வாடும். இத்தகைய சூழலில் அவர்களால் ரூ.60 லட்சம் அபராதம் செலுத்துவது எவ்வாறு சாத்தியமாகும்? அவ்வாறு அபராதம் செலுத்தாவிட்டால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் வாழ்நாள் முழுவதும் இலங்கை சிறைகளில் வாட வேண்டும். இது கொடுமையான மனித உரிமை மீறல்.

மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக டெல்லியில் கடந்த 22.01.2013 அன்று அப்போதைய இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித், இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரிஸ் ஆகியோர் முன்னிலையில் நடந்த இந்திய&இலங்கை கூட்டு ஆணையத்தின் கூட்டத்தில்,‘‘எல்லை தாண்டி வந்து மீன்பிடிக்கும் மீனவர்கள் மீது எத்தகைய சூழலிலும் பலப்பிரயோகம் செய்யக்கூடாது. மீனவர்களை மனிதாபிமானத்துடன் நடத்தப்படும் போக்கு தொடர வேண்டும்’’ என ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 18.01.2015 அன்று இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரா டெல்லியில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசிய போது, இரு நாட்டு மீனவர்களும் எல்லை தாண்டி மீன்பிடிக்கும் விஷயத்தில் மனிதநேய அணுகுமுறை தொடர வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. 3 மாத சிறைத் தண்டனையும், ரூ.60 லட்சம் அபராதம் விதிப்பதுமா மனிதநேய அணுகுமுறை?

இரு தரப்புப் பேச்சுக்களில் எடுக்கப்பட்ட எந்த முடிவையும் மதிக்காமல் தமிழக மீனவர்கள் மீது சிங்கள அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது ஏற்கத்தக்கதல்ல. இது மீனவர்கள் மீதான அடக்குமுறை மட்டுமல்ல.... இந்திய இறையாண்மை மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். கடந்த 30 ஆண்டுகளில் மட்டும் சிங்களப் படையினரால் 800-க்கும் கூடுதலான தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்களின் 200&க்கும் மேற்பட்ட படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இப்போது தமிழக மீனவர்களுக்கு தலா ரூ.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்திய இறையாண்மைக்கு சவால் விடுக்கும் வகையிலான இத்தகைய செயல்களை இந்தியா இன்னும் வேடிக்கைப் பார்க்கப் போகிறதா?

தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் அமைதி காப்பது முறையல்ல. இலங்கை அரசை இந்தியா கடுமையாக எச்சரித்து அந்நாட்டு சிறைகளில் வாடும் தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க வலியுறுத்த வேண்டும்; தமிழக மீனவர்களின் படகுகளை மீட்டுத் தர வேண்டும். இவற்றுக்கெல்லாம் மேலாக மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT