ADVERTISEMENT

எதிரிகளாகும் கடல்கள்: புவிவெப்பமயமாதலை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை தேவை! ராமதாஸ்

05:38 PM Aug 31, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை : ’’மனித குலத்தின் உற்ற தோழனாக திகழும் கடல்கள் மிகப்பெரிய எதிரிகளாக மாறுவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கி விட்டதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் காலநிலை மாற்றத்திற்கான பன்னாட்டு அரசுக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. புவி வெப்பமயமாதல் உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில், இப்புதிய எச்சரிக்கை உலகம் விழித்துக் கொள்ள வேண்டி யதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

புவிவெப்பமயமாதலின் தீயவிளைவுகளை கட்டுப்படுத்துவதற்கான செயல்திட்டம் பற்றி விவாதிப்பதற்காக ஐக்கிய நாடுகள் அமைப்பின் உச்சி மாநாடு செப்டம்பர் 23&ஆம் தேதி நியூயார்க்கில் நடைபெறவிருக்கும் நிலையில், அதற்கு முன்னோட்டமாக கடல்கள் & பனிப்படலம் மீதான புவி வெப்பமயமாதலின் தாக்கம் குறித்த காலநிலை மாற்றத்திற்கான பன்னாட்டு அரசுக் குழுவின் சிறப்பு அறிக்கையை ஐ.நா. அமைப்பு வெளியிட்டுள்ளது. புவி வெப்பமயமாதலால் கடலில் கடுமையான பாதிப்புகள் ஏற்படத் தொடங்கி விட்டதாகவும், அதனால் கடலில் மீன்வளம் வேகமாக குறைந்து வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, சூப்பர் புயல்களால் ஏற்படும் பேரழிவுகள் இயல்பை விட பலநூறு மடங்கு அதிகரித்து விட்டதாகவும், கடல் மட்டம் உயர்வதால் கோடிக்கணக்கான மக்கள் இடம் பெயர வேண்டியிருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புவி வெப்பமயமாதல் காரணமாக உலகம் முழுவதும் உள்ள பனிப் பாறைகள் உருகி தேவைக்கும் அதிகமான தண்ணீரைக் கொடுக்கும் என்றும், ஒரு கட்டத்திற்கு பிறகு குடிநீருக்குத் தேவையான தண்ணீர் கூட பனிப்பாறைகளில் இருந்து கிடைக்காது என்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் காலநிலை மாற்றத்திற்கான பன்னாட்டு அரசுக் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புவி வெப்பமயமாதலால் உலகிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதை சுட்டிக்காட்டும் அந்த அறிக்கை, புவியின் வெப்பநிலை அதிகரிப்பை 1.5 டிகிரி செல்சியஸ் என்ற அளவுக்குள் கட்டுப்படுத்த தவறினால் உலகையும், மனித குலத்தையும் காப்பாற்ற முடியாது என்றும் எச்சரித்திருக்கிறது. மனிதகுலத்தின் தொழிற்துறை சார்ந்த செயல்பாடுகளால் வெளியாகும் கரியமில வாயுவின் அளவை மிகப்பெரிய அளவில் குறைக்காவிட்டால், வட துருவத்தில் உள்ள பனிப்பாறைகளில் குறைந்தது 30% நடப்பு நூற்றாண்டுக்குள் உருகி விடும் என்று பன்னாட்டுக்குழு கூறியுள்ளது.

அவ்வாறு பனிப்பாறைகள் உருகும் போது, அவற்றில் அடைபட்டுக் கிடக்கும் பல்லாயிரம் கோடி டன்கள் கரிமம் வெளியாகி வளிமண்டலத்தில் சேரும்; அதனால் புவி வெப்பமயமாதல் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கைமீறி சென்று விடும் ஆபத்து காத்திருக்கிறது.


இதைத் தான் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து எச்சரித்து வருகிறது. புவி வெப்பமயமாதலை தடுக்கக்கூடிய நிலையில் உலகம் இல்லை; மாறாக கட்டுப்படுத்த வேண்டிய சூழலில் தான் பூமி உள்ளது.

புவிவெப்பமயமாதலுக்கு காரணம் யார்? அதைக் கட்டுப்படுத்த வேண்டிய கடமை யாருக்கு அதிகம்? என்பது குறித்த வினாக்களை எழுப்பி, அதற்கான விடைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும் காலகட்டத்தை உலகம் கடந்து விட்டது. புவிவெப்பமயமாதலுக்கு முதன்மைக் காரணம் அமெரிக்கா தான் என்றாலும் கூட, அதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஒத்துழைக்க அந்நாடு மறுக்கிறது. அதைக் காரணம் காட்டி, நாமும் நமது கடமைகளை நிறைவேற்றத் தயங்கினால் மிக மோசமான அழிவு ஏற்படும். அது அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளை விட இந்தியாவையே அதிகமாக பாதிக்கும்.

1960-ஆம் ஆண்டுக்கு பிந்தைய 60 ஆண்டுகளில் புவிவெப்பமயமாதலால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 31% அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறது. புவிவெப்பமயமாதல் மட்டும் இல்லாவிட்டால் உலகின் பொருளாதார வல்லரசுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்திருக்கும். புவிவெப்பமயமாதல் கட்டுப்படுத்தப் படாவிட்டால் 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 3.50 கோடி வேலையிழப்பு ஏற்படும். உலகிலேயே புவிவெப்பமயமாதலால் அதிக வேலையிழப்பை சந்திக்கும் நாடாக இந்தியா தான் இருக்கும். விவசாயம் கடுமையாக பாதிக்கப்படுவதுடன், அதிகரிக்கும் வெப்பநிலையால் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் சொல்ல முடியாத துயரங்களுக்கு ஆளாவார்கள். அதனால், புவி வெப்பமயமாதலின் தீமைகளை கட்டுப்படுத்த வேண்டிய கடமை உலகின் மற்ற நாடுகளை விட இந்தியாவுக்கு அதிகமாக இருக்கிறது.

எனவே, புவிவெப்பமயமாதலின் தீய விளைவுகளைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் இந்தியா மேற்கொள்ள வேண்டும். அதற்காக காலநிலை அவசர நிலையை பிரகடனப்படுத்த வேண்டும். உலகம் முழுவதும் நாடுகள், உள்ளாட்சி அமைப்புகள், உயர்கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இத்தகைய பிரகடனத்தை வெளியிட்டு, காலநிலை மாற்றத்தின் தீமைகளை தடுக்கும் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளன. அதேபோல், நாடாளுமன்றத்தில் மத்திய அரசும், தமிழக சட்டமன்றத்தில் அதிமுக அரசும் காலநிலை மாற்ற அவசர நிலை பிரகடனத்தை நிறைவேற்ற வேண்டும்; புவிவெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த வேண்டும்.’’

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT