ADVERTISEMENT

ரெய்டு... லஞ்சப் பணம் பறிமுதல்... உயரதிகாரி முதல் ஊழியர்கள் வரை வழக்கு...! 

06:42 PM Oct 01, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஈரோடு அருகே உள்ள சோலார் கொள்ளு காட்டு மேட்டில் ஈரோடு கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு புதிய வாகனங்களுக்கு எண் பதிவு செய்தல், ஓட்டுனர் உரிமம், புதிய வாகனங்களுக்குத் தகுதி சான்று வழங்குதல், பழைய வாகனங்களைப் புதுப்பித்தல், பழைய வாகனங்களுக்கு எப்.சி. காட்டுதல், எல்.எல்.ஆர். விபத்து இன்சூரன்ஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான பதிவுகள் செய்யப்பட்டு வருகிறது.


இந்த வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அதிக அளவில் இடைத்தரகர்கள் செயல்பட்டு வருவதாக ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், 30ந் தேதி (நேற்று மாலை) ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசார் 4 மணி அளவில் ஈரோடு லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ், இன்ஸ்பெக்டர் ரேகா ஆகியோர் தலைமையிலான போலீசார் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு இரண்டு ஜீப்களில் வந்தனர்.


அலுவலகத்தில் உள்ள இரண்டு இரும்பு கதவுகளையும் பூட்டி உள்ளே சென்றனர். உள்ளே இருந்து யாரும் வெளியே அனுமதிக்கப்படவில்லை. அதைப்போல் வெளியே இருந்து யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. அலுவலக ஊழியர்கள் வைத்திருந்த செல்போன்களும் வாங்கி ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையை தொடங்கினார்கள்.


அலுவலகத்திலிருந்த ஊழியர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதற்கிடையே உள்ளே இருந்த அதிகாரிகள் பணியாளர்கள் மற்றும் இடைத்தரகர்கள் சிலர் தாங்கள் வைத்திருந்த பணத்தை ஜன்னல் பின்புறமாக வீசியதாகவும், அந்த பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்ததாகவும் கூறப்படுகிறது. இவ்வாறாக நேற்று இரவு 10.30 மணி வரை சோதனை நடந்தது. இந்த சோதனையில் கணக்கில் வராத ரூபாய் 1 லட்சத்து 31 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் சில முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர்.


அதைத் தொடர்ந்து கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் பிரதீபா, உதவியாளர் சுரேஷ் பாபு, மோட்டார் போக்குவரத்து ஆய்வாளர் கதிர்வேல் மற்றும் இடைத்தரகர்கள் 6 பேர் என மொத்தம் 9 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT