ADVERTISEMENT

நீட் தேர்வு எழுதும் அரசுப் பள்ளி மாணவிகள்! வேன் ஏற்பாடு செய்து அழைத்துச் சென்ற பள்ளி நிர்வாகம்! 

11:18 AM May 07, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கீரமங்கலத்தில் இருந்து புதுக்கோட்டைக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற அரசுப் பள்ளி மாணவிகளை பள்ளி நிர்வாகத்திலிருந்து தலைமை ஆசிரியர் உள்பட ஆசிரியர்களே வேன்கள் மூலம் அழைத்துச் சென்றனர்.

மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு இன்று மதியம் நடக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவிகள் கடந்த மூன்று ஆண்டுகளில் 12 மாணவிகள் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் படித்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நீட் தேர்வில் சாதித்த ஒரு பள்ளியாக உள்ளது கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி.

இந்த நிலையில், இன்று நடக்கும் நீட் தேர்விற்கு கீரமங்கலம் மகளிர் மேல்நிலைப் பள்ளியிலிருந்து புதிய மாணவிகள் 105 பேரும் பழைய மாணவிகள் 30 பேரும் என மொத்தம் 135 மாணவிகள் தேர்வு எழுதச் சென்றனர். இவர்களுக்கு புதுக்கோட்டை, அறந்தாங்கியில் பல்வேறு தேர்வு மையங்கள் போடப்பட்டிருந்ததால் மாணவிகள் அவதிப்படக் கூடாது என்பதற்காக பள்ளி நிர்வாகத்தின் சார்பில் வேன்கள் ஏற்பாடு செய்து பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்களின் பாதுகாப்பில் அனுப்பி வைத்தனர். முன்னதாக மாணவிகளுக்கு பதற்றத்தை குறைக்க அறிவுரைகள் கூறி வாழ்த்துகள் கூறினார்கள்.

இது குறித்து தலைமை ஆசிரியர் (பொ) குகன் கூறும் போது, “எங்கள் பள்ளியில் நீட் வருவதற்கு முன்பே பல மாணவிகள் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவம் படித்து மருத்துவர்களாக உள்ளனர். தற்போது நீட் தேர்வு வந்த பிறகு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் ஒதுக்கீட்டில் எங்கள் பள்ளி மாணவிகள் 4 பேர் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவம் படித்து வருகிறார்கள். அதே போல 2 ஆண்டுகளுக்கு முன்பு 7 மாணவிகள் தேர்ச்சி பெற்று பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் படித்து வருகின்றனர். கடந்த ஆண்டு ஒரு மாணவி தேர்ச்சி பெற்று மருத்துவம் படித்து வருகிறார்.

இந்த வருடம் புதிய மாணவிகள் 105 பேரும், பழைய மாணவிகள் 30 பேரும் என 135 மாணவிகள் நீட் தேர்வு எழுத செல்கிறார்கள். அவர்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்று தேர்வு எழுத பள்ளி நிர்வாகம் மூலம் வாகன ஏற்பாடு செய்து ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் உடன் அனுப்பி இருக்கிறோம். அதனால் இந்த வருடமும் எங்கள் பள்ளி மாணவிகள் அதிகமானோர் மருத்துவம் படிக்க செல்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT