ADVERTISEMENT

‘ஆசையாசையா பிரியாணியைக் குழந்தைகளுக்குக் கொடுத்தோம்.. இப்ப ஆஸ்பத்திரியில கிடக்குறோம்..’ - புதுக்கோட்டையில் சோகம்

10:22 AM May 06, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட 16 வயது சிறுமி பலியான சம்பவத்தின் பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில், தற்போது அறந்தாங்கியில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட கட்டிடக் கூலித் தொழிலாளர்கள், அவர்களின் குழந்தைகள் என 41 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பிரியாணி கடைக்கு உணவு பாதுகாப்பு அதிகாரி சீல் வைத்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி செந்தமிழ் நகரில் சித்திரவேல் என்பவரின் வீடு கட்டுமானப் பணியில் நேற்று கான்கிரீட் போடப்பட்டது. கட்டிடக் கூலித் தொழிலாளர்கள் மற்றும் உறவினர்களுக்காக அறந்தாங்கியில் உள்ள ஒரு பிரியாணி கடையில் சிக்கன் பிரியாணி வாங்கி கொடுத்துள்ளார். கான்கிரீட் பணியை பாதியில் நிறுத்திவிட்டு சாப்பிட முடியாது என்பதால் மாலை 5 மணி வரை வேலை முடிந்த பிறகு பிரியாணி பொட்டலங்களை தொழிலாளர்கள் வாங்கியுள்ளனர்.

பிரியாணி என்றால் வீட்டில் இருக்கும் தங்கள் குழந்தைகளுக்கு பிடிக்குமே என்று பல பெண்கள் பிரியாணியை சாப்பிடாமல் தங்கள் குழந்தைகளுக்காக வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளனர். இரவில் பிரியாணியை குழந்தைகளோடு சாப்பிட்டுப் படுத்த சில மணி நேரத்தில் வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால், அந்தப் பகுதி மக்கள் ஒவ்வொருவராக மருத்துவமனையில் தொடர்ந்து அனுமதியாகியுள்ளனர்.

+2 பள்ளி மாணவ, மாணவிகள் இந்த உபாதைகளோடு தேர்வு எழுதச் சென்று, தேர்வு எழுதிவிட்டு மருத்துவமனைக்கு வந்துள்ளனர். நேற்று வரை 4 வயது குழந்தை உட்பட 27 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த நிலையில், நேற்று இரவு மேலும் குழந்தைகள் பெரியவர்கள் என 14 பேர் சிகிச்சைக்கு வந்துள்ளனர். இதனால் 41 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், ஆண்கள் 21 பேர், பெண்கள் 13 பேர், ஆண் குழந்தைகள் 4 பேர், பெண் குழந்தைகள் 3 பேர் நேற்று மருத்துவமனையில் அனுமதியாகியுள்ளனர்.

இதில், கனிமொழி என்ற பெண்ணுக்கு வயிற்று வலி அதிகமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். தகவல் அறிந்து வந்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சம்மந்தப்பட்ட பிரியாணிக்கடைக்கு சீல் வைத்துள்ளனர். பிரியாணிக்கு பயன்படுத்திய சிக்கன் பழையதா அல்லது வேறு ஏதேனும் காரணங்களா என்பது குறித்தும் விசாரணை நடத்திவருகின்றனர்.

மேலும், பாதிக்கப்பட்டுள்ளவர்களிடம் ரத்த மாதிரிகள் எடுத்து கேரளாவைப் போல வேறு ஏதேனும் வைரஸ் உள்ளதா என்பதை உடனே பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT