ADVERTISEMENT

வகுப்பறையில் ஆசிரியர்கள்..  மரத்தடியில் மாணவர்கள்.. முன்மாதிரிப் பள்ளியில் நடந்த போராட்டம்

03:48 PM Sep 05, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியத்தில் உள்ள வல்லம்பக்காடு கிராமத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு மாணவர்கள் எண்ணிக்கை மிகக்குறைவாக உள்ளதாக கூறி தமிழக அரசு அந்தப் பள்ளியை மூட உத்தரவிட்டது. அதன் பிறகு கிராமத்தினர் ஒன்றிணைந்து அருகிலுள்ள மாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோதிமணியின் ஆலோசனையைப் பெற்று மீண்டும் பள்ளியை செயல்படுத்த கிராம மக்களும் இளைஞர்களும் முன்வந்தனர். அதன்படி அந்தப் பகுதியிலிருந்து அறந்தாங்கி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு தனியார் பள்ளிகளுக்கு செல்லும் தங்கள் குழந்தைகளை மீண்டும் அரசு பள்ளியில் சேர்த்து அரசுப் பள்ளியை மூட விடாமல் செய்ய முடிவெடுத்தனர்.

ADVERTISEMENT


அந்த முடிவின்படி அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் தங்கள் சொந்த செலவில் குழந்தைகளை எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகளை தொடங்கி 2 ஆசிரியர்களை நியமித்து வகுப்புகளை நடத்த தொடங்கியதுடன் அருகிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர் எண்ணிக்கை அதிகரித்து பள்ளியை தொடர்ந்து செயல்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் இந்த பள்ளி தற்போது தமிழக அரசு செயல்படுத்தி வரும் மழலையர் வகுப்புகளை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு செயல்படுத்திக் காட்டிய முன்மாதிரி பள்ளியாக இதுவரை திகழ்கிறது. இதைப் பார்த்து அருகில் உள்ள பல கிராமப்புற பள்ளிகளில் கிராமத்தினர் மழலையர் வகுப்புகளை சொந்த செலவில் நடத்தி வருகின்றனர்.


ஆனால் முன்மாதிரியான இந்தப் பள்ளிக்கு கடந்த சில ஆண்டுகளாக பெரும் சோதனைகள் வந்துள்ளது. தற்போது 95 மாணவர்கள் படித்தாலும் ஆசிரியர் எண்ணிக்கை ஒன்று மட்டுமே. அதுவும் தலைமை ஆசிரியர் மட்டும் தான்.


இந்த பள்ளி மாணவர்களின் எழுத்துத் திறன் மற்றும் பேச்சுத்திறனை பார்த்து தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் உள்ள பள்ளி ஆசிரியர்கள் வந்து பார்த்து சென்றுள்ளனர். ஆனால் ஆசிரியர் இல்லாமல் தள்ளாடும் இந்த பள்ளிக்கு ஆசிரியர் நியமனம் கிடைக்குமென்று காத்திருந்த பெற்றோர்கள் அதிகாரிகளின் அலட்சியத்தால் ஆசிரியர் கிடைக்கவில்லை.


அதிகாரிகளை நம்பி தனியாருக்கு போன குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்த்தோம். ஆனால் பள்ளியில் ஆசிரியரே இல்லாமல் எங்கள் குழந்தைகள் எப்படி படிப்பார்கள் என்று இன்று மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் எதிரே உள்ள மரத்தடியில் அமரவைத்து தாங்களும் காத்திருந்தனர்.

வகுப்பறையில் ஆசிரியர்களும் மரத்தடியில் மாணவர்களும் நீண்ட நேரம் காத்திருந்தனர். நீண்ட நேரத்திற்குப் பிறகு அங்குவந்த வட்டார கல்வி அலுவலர் அருள், பள்ளிக்கு மாற்று பணியாக இரு ஆசிரியர்களை அனுப்பியுள்ளோம் என்றார். மாற்றுப்பணியும் நிரந்தமில்லை. நாளை வேறு பள்ளிக்கு ஆசிரியர் இல்லை என்றால் இவர்களை அனுப்பிவிடுவீர்கள். அதனால் நிரந்த ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படும் வரை மாற்றுப்பணிக்கு வந்த ஆசிரியர்களை மாற்ற மாட்டோம் என்று எழுதிக் கொடுக்க வேண்டும் என்றனர் பெற்றோர்கள்.


இதனைக்கேட்ட வட்டார கல்வி அலுவலர் அருள் மாற்றுப் பணிக்கு வரும் ஆசிரியர்கள் நிரந்தர ஆசிரியர்கள் வரும் வரை இதே பள்ளியில் தொடர்ந்து பணியாற்றுவார்கள் என்று எழுதிக் கொடுத்தார். அதன்பிறகு மாணவர்கள் வகுப்புகளுக்கு செல்ல பெற்றோர்கள் அனுமதித்தனர்.

தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் உபரியாக உள்ளதாக தமிழக அரசு சொல்லிக் கொண்டிருக்கும் நேரத்தில் அறந்தாங்கி ஒன்றியத்தில் 10க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 15க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பற்றாக்குறையாகவே உள்ளனர். இதனால் ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் மற்றொரு பள்ளிக்கு மாற்றுப் பணிக்கு செல்வதால் அவர்களது நேரத்தை வீணடிப்பதை செய்து வருகிறார்கள். எப்போது இந்த பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்த நிரந்தர ஆசிரியர்கள் கிடைப்பார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.


மேலும் வல்லம்பக்காடு பள்ளியில் கட்டிட வசதிகளும் குறைவாக உள்ளது. இவற்றையும் உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதே பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது. மேலும் தமிழக அரசு, அரசுப்பள்ளிகளை தொடர்ந்து செயல்படுவதை விட தனியார் பள்ளிகளுக்கு காட்டும் அக்கரை அதிகமாக உள்ளது என்றும் கூறுகின்றனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT