ADVERTISEMENT

ஏழு ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலத்தை விட்டு வெளியேறிய விவசாயி...குவியும் பாராட்டுக்கள்!

08:52 PM Aug 05, 2019 | santhoshb@nakk…

திருச்சி மாவட்டம் குளித்தலை முதலைப்பட்டி கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று நீதிமன்றத் சென்று உத்தரவு வாங்கி வந்த தந்தை, மகன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் இருந்த அரசு கட்டிடங்கள் பள்ளிகள், கோயில்கள், பள்ளிவாசல்கள், வீடுகள் உள்ளிட்ட கட்டங்கள் நீர்நிலை ஆக்கிரமிப்புகளில் உள்ளது. இதனால் முத்துப்பேட்டையில் இருந்த 100 குளங்களில் தற்போது 15 குளங்கள் தான் உள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT


அதனால் ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்று முகமது மாலிக் என்ற இளைஞர் தன்னிச்சையாக நீதிமன்றம் சென்றார், தீர்ப்பை வென்றார். தமிழக அரசை அரசாணையே போட வைத்தது மாலிக் பெற்ற நீதிமன்ற உத்தரவு (அரசாணை எண் 540). அதன் பிறகு 3 நீர்நிலைகளில் இருந்த 85 வீடுகள், தனியார் பள்ளி, 2 பள்ளிவாசல்கள், ஒரு கோயில், பேரூராட்சிக்கு சொந்தமான கட்டிடம் அகற்றப்பட்டது. அதன் பிறகும் அவரை விட்டு வைத்தால் மொத்த ஆக்கிரமிப்புகளையும் அகற்ற உத்தரவு பெற்று வருவார் என்ற எண்ணத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் கூட்டமைப்பு முகமது மாலிக்கை சுற்றி வளைத்து வெட்டியது. கொத்துக்கறியாக உடல் வெட்டுப்பட்டு ரத்தம் கொட்ட கொட்ட சிகிச்சை பெற்று மீண்டும் உயிருடன் வந்தார். அதன் பிறகு உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பின்பு இவருக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் ஆணையிட்டது. இதனையடுத்து முகமதுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தான் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு வடக்கு கிராமத்தைச் சோந்த விவசாயி பாஸ்கரின் வீட்டுக்கு அருகில் உள்ள வேம்பங்குடி கிராமத்தில் பெரியகுளம் ஏரியில் உள்ள 7 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலத்தை தானாக விட்டுக் கொடுத்துவிட்டார். இது குறித்து பாஸ்கர் கூறும் போது, எனக்கு 15 ஏக்கர் பட்டா நிலம் உள்ளது. ஆழ்குழாய் கிணறு அமைத்து தென்னை, நெல் விவசாயம் செய்கிறேன். அத்தோடு அருகில் வேம்பங்குடி பெரிய குளம் ஏரியில் 7 ஏக்கர் நீர்நிலை புறம்போக்கையும் பிடித்து கரும்பு, மல்லிகை, நெல் விவசாயம் செய்கிறேன். தற்போது குடிமராமத்து பணிகளில் பெரிய குளம் வந்துள்ளதால் அதிகாரிகள் வந்து அளந்தார்கள் என்னிடம் 7 ஏக்கர் ஆக்கிரமப்பு நிலம் உள்ளதை அறிந்தேன். உடனே அந்த நிலத்தை விட்டு வெளியேறுவதாக அதிகாரிகளிடம் சொல்லிவிட்டேன்.


அதாவது என்னிடம் உள்ள 15 ஏக்கர் நிலத்திலும் கிணற்றில் உள்ள தண்ணீர் இறைத்து விவசாயம் செய்து வந்தேன். அப்போது குளத்தில் தண்ணீர் இருந்தது. அதன் பிறகு ஆழ்குழாய் கிணறு. இப்ப அந்த ஆழ்குழாய் கிணற்றிலும் தண்ணீர் கீழே சென்றுவிட்டது. அதனால் குளத்தில் தண்ணீர் இருந்தால். நிலத்தடி நீர் மேலே வரும் என்பதை இப்ப உணர்கிறேன். அதனால் தான் தானாக வெளியேறிவிட்டேன். என்னைப் போல ஒவ்வொரு விவசாயியும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை விட்டு வெளியேறி நீர்நிலைகளை உயர்த்த வேண்டும். அப்போது தான் நமது அடுத்த தலைமுறைக்கு தண்ணீரை விட்டு செல்ல முடியும் என்றார். விவசாயி பாஸ்கரின் இந்த செயலை சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர். இதே போல ஒவ்வொரு ஆக்கிரமிப்பாளரும் ஆக்கிரமிப்புகளை விட்டுக் கொடுத்தால் பிரச்சனையின்றி நீர்நிலைகளை உயர்த்தி நிலத்தடி நீரை உயர்த்தலாம், விவசாய செழிக்கும், குடிக்க தண்ணீர் கிடைக்கும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.








ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT