ADVERTISEMENT

"மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்"- புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி!

01:29 PM Dec 12, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது புதுச்சேரி மாநிலகாங்கிரஸ் கட்சித் தலைவர் சுப்பிரமணியன், தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தார்.

ADVERTISEMENT

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, "மு.க.ஸ்டாலினை நானும் புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் சுப்பிரமணியனும் மரியாதை நிமித்தமாக சந்திப்பதற்காக அறிவாலயம் வந்திருந்தோம். கடந்த ஏழு மாத காலமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கரோனா தொற்று அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது அது ஓரளவு குறைந்திருக்கிறது. ஆகவே கடந்த வாரம் அவர்களை சந்திப்பதற்கு நான் நேரம் ஒதுக்கிக் கேட்டேன். அவர்கள் இன்று வரச் சொல்லிக் கூறியிருந்தார்கள். எங்களது சந்திப்பு மரியாதையை நிமித்தமான சந்திப்பு. புதுச்சேரி மாநிலத்தை பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும். கடந்த நான்கரை ஆண்டு காலமாக புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து சுமார் நான்கு ஆண்டுகளாக மத்தியில் இருக்கிற பாரதிய ஜனதா ஆட்சியும், புதுச்சேரியில் துணை நிலை ஆளுநராக இருக்கின்ற கிரண்பேடியும், புதுச்சேரியில் மாற்று ஆட்சி இருக்கின்ற காரணத்தினால் ஆட்சிக் கவிழ்ப்பு வேலைகளை செய்வதற்கு அவர்கள் முனைந்து பாடுபட்டார்கள். அப்படி இருந்தாலும் கூட அதையெல்லாம் முறியடித்து நான்கரை ஆண்டு காலமாக மக்கள் நலத்திட்டங்களை எங்களுடைய காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி ஆட்சியில் மிக செம்மையாக செய்து வருகிறோம். அது மக்கள் நலத்திட்டங்களாக இருந்தாலும் சரி, தொழில் வளர்ச்சியாகவும் இருந்தாலும் சரி அல்லது புதுச்சேரி மாநிலத்தின் சுற்றுலா வளர்ச்சி, சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருப்பது, கல்வித்துறையில் மருத்துவத்துறையில் வளர்ச்சியைக் காண்பது போன்றவைகள் எல்லாம் சிறப்பான முறையில் செய்து வருகிறோம்.

அதுமட்டுமில்லாமல் எங்களுடைய மாநிலத்தில் பல விருதுகளை எங்கள் அரசு மத்திய அரசிடமிருந்து பெற்றிருக்கிறது. குறிப்பாக இப்பொழுது இந்த கரோனா தொற்று காலத்தில் புதுச்சேரி மாநிலத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது அகில இந்திய அளவில் 94% பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து சென்றிருக்கிறார்கள். ஆனால் எங்களுடைய மாநிலத்தில் 98% பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள், இறப்பு விகிதம் 1.6% ஆக இருக்கிறது. தினமும் பாதிக்கப்படுகிறவர்கள் 1% கீழ் உள்ளன.

உமிழ்நீர் பரிசோதனை செய்வதில் கூட அகில இந்திய அளவில் புதுச்சேரி மாநிலம் முதலிடத்தில் உள்ளது. மொத்தமுள்ள 15 லட்சம் மக்கள் தொகையில் இதுவரை 4.5 லட்சம் மக்களுக்கு உமிழ்நீர் பரிசோதனை செய்து, மத்திய அரசுடைய எல்லையைத் தாண்டி அதிகப்படியாக செய்திருக்கிறோம். இந்த 'நிவர்' புயல் வந்த சமயத்திலே, அதைத்தான் மு.க.ஸ்டாலினிடம் விளக்கமாகக் கூறினேன்.

இந்த கரோனா தொற்று நோயை எதிர்கொள்வதிலிருந்து, 'நிவர்' புயல் வந்த பொழுது கூட புதுச்சேரி மாநிலத்தில் நிவாரண பணிகளை முடுக்கிவிட்டு, மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில் வெள்ள நீரையெல்லாம் ஆறு மணி நேரத்தில் மக்களை பாதிக்காத வகையில் அதை கடலுக்கு கொண்டு செல்வதிலிருந்து, மக்களுக்கு நிவாரணம் வழங்குவதிலிருந்து அதிகாரிகளும், நானும், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களும் அதில் பணிப்புரிந்தோம் என்று அவரிடம் விளக்கமாக கூறினேன்.

தி.மு.க.- காங்கிரஸ் தலைமை எடுக்கும் முடிவின் படி அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கிறோம். நிர்வாக ரீதியாக இருக்கக் கூடிய பிரச்சனைகளை மனக்கசப்பாகப் பார்க்கக்கூடாது. 2ஜி வழக்கில் நீதிமன்றத்தின் உத்தரவின் படியே நடவடிக்கை எடுக்கப்பட்டது; ராசா குற்றமற்றவர் என கோர்ட் கூறியது. 2ஜி வழக்கின் பின்புலத்தில் யார் இருந்தார்கள் என்பது அனைவருக்குமே தெரியும்." இவ்வாறு புதுச்சேரி முதல்வர் கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT