ADVERTISEMENT

சாலைப் பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்...!

09:36 AM Sep 28, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இருந்து கிருஷ்ணகிரி வரை 180 கிலோமீட்டர் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி பல ஆண்டுகளாக நடப்பதும் நிற்பதும் மீண்டும் நடப்பதும் நிற்பதும் என ஆமையை விட மிக மிக மெதுவாக நடைபெற்று வருகிறது. இந்த சாலைப் பணியை விரைந்து முடிக்குமாறு பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்திவருகின்றன. இந்த சாலைப் பணியில் முறைகேடு செய்ததாக சி.பி.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சாலை விரிவாக்கத் திட்ட அதிகாரியும் உண்டு.

மத்தியில் ஆண்ட காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் துவக்கப்பட்ட இந்த சாலைப்பணி பாஜக அரசு ஆட்சிக்கு வந்து ஆறு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் பணி மட்டும் இன்னும் நிறைவு பெறவில்லை. இந்த நிலையில் நேற்று திண்டிவனம் சந்தை மேட்டிலிருந்து ஐயன்தோப்பு வழியாகச் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை வரை இணைக்கும் மேற்படி சாலைப் பணி நடைபெற்றுவந்தது.

அப்போது, அந்தப் பகுதியில் விவசாய நிலம் வைத்திருக்கும் மக்கள் ஐயன்தோப்பில் இருந்து சந்தைமேடு வரை சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் என்று கூறி சாலை அமைக்கும் பணியைத் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரோஷனை காவல் நிலைய ஆய்வாளர் காமராஜ் மற்றும் போலீஸார் மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அவர்களின் கோரிக்கையை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் தெரியப்படுத்தி நடவடிக்கை எடுப்பதாகவும் அதற்காக சாலைப் பணியைத் தடுக்கக்கூடாது எனவும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் நெடுஞ்சாலைத்துறை தாசில்தார் கலா, வருவாய் ஆய்வாளர் குணசேகரன், கிராம நிர்வாக அலுவலர் செல்வக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்களது கோரிக்கையை அரசு உயரதிகாரிகளுக்கு உடனடியாக தெரியப்படுத்தி விரைவில் தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்ததையடுத்து சாலைப் பணியைத் தடுத்து நிறுத்திய பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT