Skip to main content

அண்ணன் தங்கை தற்கொலை! காவல்துறையிடம் சிக்கிய உருக்கமான கடிதம்! 

Published on 15/02/2022 | Edited on 15/02/2022

 

Poverty's cruel brother sister passes away

 

அண்ணன் தங்கை இருவரும் கடிதம் எழுதி வைத்துவிட்டு ஒரே வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

விழுப்புரம் பகுதியைச் சேர்ந்தவர்கள், சுசீந்தரன்(58), பரிமளா(50) இவர்கள் இருவம் அண்ணன் தங்கை. பரிமளாவை சென்னை வளசரவாக்கம் பகுதியில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது தம்பி சுசீந்திரனுடன் விழுப்புரத்தில் வசித்து வந்துள்ளார் பரிமளா. 

 

சுசீந்திரன் தனியார் கம்பெனியில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கரோனா பரவல் அதிகரித்ததின் காரணமாக அவரை வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்பி விட்டனர். இதனால் அண்ணன் தங்கை இருவரும் வறுமையில் வாடியுள்ளனர். இந்த நிலையில் சுசீந்திரன் வசித்து வந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் சுசீந்திரன் சகோதரர் சுரேஷ்பாபுவிற்கு தகவல் கூறியுள்ளனர். அவர் விழுப்புரம் நகர காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். அங்கிருந்து போலீசார் சுசீந்திரன் வீட்டிற்கு விரைந்து வந்து முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது சுசீந்திரன், அவரது சகோதரி ஆகிய இருவரின் உடல்களும் அழுகிய நிலையில் கிடந்துள்ளன. 

 

இரு சடலங்களையும் கைப்பற்றி போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அண்ணன் தங்கை இறந்து கிடந்த இடத்தில் போலீஸாருக்கு ஒரு கடிதம் கிடைத்துள்ளது. அந்தக் கடிதத்தை கைப்பற்றி, அதைப் படித்துப் பார்த்தபோது அந்த கடிதத்தை பரிமளா எழுதியுள்ளார் என்பது தெரியவந்தது. 

 

அதில், ‘எனது கணவர் மற்றும் உறவினர்கள் மூலம் மாதந்தோறும் சிறு தொகை கிடைத்து வந்தது. கடந்த பல மாதங்களாக அந்தப் பண உதவி நின்று போனது. யாரும் கொடுத்து உதவவில்லை. தம்பிக்கும் வேலை இல்லை. இதனால் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் மிகவும் கஷ்டமான நிலை ஏற்பட்டது. மேலும் இதன் காரணமாக தம்பிக்கு மனநிலை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், எனக்கும் தம்பிக்கும் மருத்துவ உதவி தேவை, அதற்குப் பணம் தேவை. வறுமையில் வாடிக் கொண்டு இருக்கும் எங்களால் பணம் செலவு செய்து சிகிச்சை செய்துகொள்ள முடியவில்லை. எனவே இருவரும் சேர்ந்து சாக முடிவு செய்தோம். எங்களின் மரணத்திற்கு வேறு எதுவும் காரணம் இல்லை’ என்று பரிமளா அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்