ADVERTISEMENT

மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

11:42 PM Dec 13, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (13/12/2021) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன் தலைமையில் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அவரிடம் வழங்கினார்கள். மொடக்குறிச்சி அருகே உள்ள கனகபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து மாவட்ட அதிகாரிகளிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.

ADVERTISEMENT

அதைத் தொடர்ந்து அவர்கள் கூறியதாவது, "எங்கள் கனகபுரம் கிராமத்தில் கனகபுரம், ஜீவா நகர், காங்கயம்பாளையம், கொண்டவநாய்க்கன்பாளையம், சேடர்பாளையம், சிஎஸ்ஐகாலனி, குல்பட் என அப்பகுதியில் 1500- க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறோம். எங்களில் பெரும்பாலும் விவசாய கூலிவேலை செய்து வருபவர்கள் தான். எங்களுக்கு பிறப்பு இறப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ், பட்டா, மாறுதல் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் பெற வேண்டி கனகபுரம் கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பிக்கும்போது அவர் சான்றிதழ் வாங்காமல் நாட் கணக்கில் எங்களை அலைக்கழிக்கிறார்.

மேலும் சான்றிதழ் வழங்குவதற்கு ரூபாய் 500 முதல் 5000 வரை லஞ்சம் கேட்கிறார். இதில் வசதி படைத்த சிலர் பணம் கொடுத்து சான்றிதழ் பெற்று விடுகின்றனர். ஆனால் தினக் கூலியான எங்களைப் போன்ற மக்கள் பணம் கொடுத்து வாங்க முடியவில்லை. இந்த கிராமத்தைச் சேர்ந்த முதியவர்கள் சிலர் முதியோர் உதவித் தொகைக்காக விண்ணப்பித்த போது பெரும்பாலான மனுக்கள் தகுதி இல்லை என்று அவரே நிராகரித்து விடுகிறார். அவருக்கு உடந்தையாக அவரது உதவியாளரும் செயல்பட்டு வருகிறார். எனவே கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர் மீது அரசு சட்ட நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு தேவையான சான்றிதழ்கள் விரைவாக கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்" என்றனர்.

முன்னதாக கிராம மக்கள் கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு கோஷம் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இங்கே கோஷம் போட கூடாது என்றும் உங்களில் முக்கியமான ஒரு சிலர் மட்டும் உள்ளே சென்று மனு கொடுங்கள் என்றனர்.

அதனை ஏற்று சிலர்மட்டும் உள்ளே சென்று மனு கொடுத்தனர். அதிகாரியின் ஊழலுக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT