ADVERTISEMENT

மரண சுரங்கம் வெட்டும் மணல் மாபியாக்கள்....கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்!!

06:00 PM Nov 23, 2019 | Anonymous (not verified)

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட சிலம்பிமங்கலம் கிராமம் உள்ளது. இங்கு 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இங்குள்ள வயல்களில் மணல் அதிகம் உள்ளது. அதனால் முந்திரி, சவுக்கு, தைலம், நெல் உள்ளிட்ட பணப்பயிர்களை விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறார்கள்.

ADVERTISEMENT

ADVERTISEMENT


இந்நிலையில், விவசாயம் செய்ய பொருளாதர வசதி இல்லாமல் இருக்கும் சில வயல்களை மணல் மாப்பியாக்கள் கைபற்றிகொண்டு அரசிடம் பெயருக்கு சவுடு மணல் என்று அனுமதி பெற்று அரசு அனுமதித்த ஆழத்தை விட 30 அடிவரை மணல் அள்ளி அரசுக்கு கோடிகணக்கில் வருவாய் இழப்பை ஏற்படுத்திகிறார்கள் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, அந்த பகுதியில் உள்ள மக்கள் சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சிலம்பிமங்கலம் பகுதி வயல்களில் ராமலிங்கம் என்பவர் 3 ஏக்கருக்கு சவுடு மணல் குவாரி என அனுமதி பெற்று அரசு அனுமதித்த ஆழத்தை விட பல மடங்குக்கு அதிகமாக மணல் அள்ளியுள்ளார். மேலும், அருகில் உள்ள வித்யாசாகர் என்பவரின் பட்டா நிலத்தில் உள்ள மணலை எந்த அனுமதியும் இல்லாமல் ஒரு ஏக்கர் அளவுக்கு 30 அடி ஆழம் வரை அள்ளியுள்ளார்.

இதனையறிந்த நிலத்தின் உரிமையாளர் வித்யாசாகர் புதுச்சத்திரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தநிலையில் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மணல் அள்ள வந்த 10க்கும் மேற்பட்ட லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையறிந்த சம்பவ இடத்திற்கு வந்த புதுச்சத்திரம் காவல்துறையினர் மணல் அள்ளக்கூடாது என்று கூறி தடுத்துநிறுத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


இது குறித்து அந்த பகுதியில் வசிக்கும் விவசாய சங்க நிர்வாகி கருனைச்செல்வம் கூறுகையில், "இந்த பகுதியில் அரசு அனுமதித்ததை விட அதிக ஆழத்தில் மணல் அள்ளுகிறார்கள். இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் தோண்டிய பள்ளத்தில் மழைகாலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும்போது வயல்வெளிக்கு விளையாட செல்லும் சிறுவர்கள் தவறி விழுந்துவிட்டால் அடுத்த கனமே மரணம் ஏற்படும் சூழல் உள்ளது.

மேலும், கால்நடைகளும் மேய்ச்சலுக்கு சென்றால் விழுந்து உயிர் பலியாகிவிடும். இது குறித்து மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை உள்ளிட்ட சம்பந்தபட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் புகார்கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த பள்ளங்களில் யாரவது விழுந்து உயிர் பலி ஆனால் மட்டும் தான் இந்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் நடவடிக்கை இல்லையென்றால் இந்த பகுதியில் உள்ள அனைத்து சமூக பொதுமக்களை ஒருங்கிணைத்து கடலூர்- சிதம்பரம் சாலையில் மிகப்பெரிய மறியல் போராட்டம் நடத்தப்படும்" என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT