ADVERTISEMENT

திருச்சி வந்த பிரதமர் மோடி; தொடங்கி வைக்கும் திட்டங்கள்!

10:35 AM Jan 02, 2024 | mathi23

பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்க இன்று(2-ந் தேதி) காலை 10 மணிக்கு, விமானம் மூலம் பிரதமர் மோடி திருச்சி வந்தடைந்தார். திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் 10:30 மணிக்கு பாரதிதாசன் பல்கலையில் நடைபெறும், 38வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று, மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார். இந்த பட்டமளிப்பு விழாவில் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் தர வரிசையில் இடம் பெற்ற (ரேங்க் ஹோல்டர்) 236 மாணவர்கள் மற்றும் 1,272 முனைவர் பட்ட மாணவர்கள் என 1,528 மாணவ, மாணவியருக்கு பட்டம் வழங்கப்பட்டுள்ளது. விழாவில் கவர்னர் ஆர். என்.ரவி. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ராஜ கண்ணப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

மேலும், திருச்சியில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில், திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டடத்தைப் பிரதமர் திறந்து வைக்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியின் போது பல ரயில்வே திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளார். அதில், சேலம் - மேக்னசைட் சந்திப்பு - ஓமலூர் - மேட்டூர் அணைப் பிரிவில், 41.4 கி.மீ, இரட்டை ரயில்பாதைத் திட்டம். மதுரை - தூத்துக்குடி இடையே 160 கி.மீ தூரத்திற்கு இரட்டை ரயில் பாதை அமைக்கும் திட்டம், திருச்சி - மானாமதுரை - விருதுநகர் ரயில் பாதை மின்மயமாக்கல், விருதுநகர் - தென்காசி சந்திப்பு மின்மயமாக்கல், செங்கோட்டை - தென்காசி சந்திப்பு - திருநெல்வேலி – திருச்செந்தூர் ரயில்பாதை மின்மயமாக்கல் ஆகிய மூன்று திட்டங்களும் இதில் அடங்கும். சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்துத் திறனை மேம்படுத்தவும், தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இந்த ரயில் திட்டங்கள் உதவும்.

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சியின்போது ஐந்து சாலைத் திட்டங்களைப் பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளார். தேசிய நெடுஞ்சாலை 81ன் திருச்சி - கல்லகம் பிரிவில் 39 கிமீ நான்கு வழிச்சாலை, தேசிய நெடுஞ்சாலை 81ன் கல்லகம் - மீன்சுருட்டி பிரிவின் 60 கி.மீ. துாரத்திற்கு 4/2 வழிச்சாலை, தேசிய நெடுஞ்சாலை 785ன் செட்டிகுளம் - நத்தம் பிரிவின் 29 கி.மீ. நான்கு வழிச்சாலை, தேசிய நெடுஞ்சாலை 536ன் காரைக்குடி - ராமநாதபுரம் பிரிவில் 80 கி.மீ. இருவழிச் சாலை, தேசிய நெடுஞ்சாலை 179ஏ சேலம் - திருப்பத்தூர் - வாணியம்பாடி சாலையின் 44 கி.மீ. தூரத்திற்கு நான்கு வழிச்சாலை ஆகியவை இதில் அடங்கும். மக்களின் பாதுகாப்பான மற்றும் விரைவான பயணத்திற்கும், திருச்சி, ஸ்ரீரங்கம், சிதம்பரம், ராமேஸ்வரம், தனுஷ்கோடி, உத்திரகோசமங்கை, தேவிப்பட்டினம், ஏர்வாடி, மதுரை போன்ற தொழில் மற்றும் வணிக மையங்களின் இணைப்பை மேம்படுத்துவதற்கும் இந்த சாலைத் திட்டங்கள் உதவும்.

மேலும், இந்நிகழ்ச்சியின் போது முக்கியமான சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார். தேசிய நெடுஞ்சாலை 332ஏ-வில் முகையூர் முதல் மரக்காணம் வரை 31 கிமீ. தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைப்பது இதில் அடங்கும். இந்த சாலை தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் உள்ள துறைமுகங்களை இணைக்கும். உலகப் பாரம்பரிய தளமான மாமல்லபுரத்திற்கு இத்திட்டம் சாலை இணைப்பை மேம்படுத்தும். அத்துடன் கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு சிறந்த போக்குவரத்து இணைப்பை இது வழங்கும்.

காமராஜர் துறைமுகத்தின் பொது சரக்குக் கப்பல் தங்குமிடம்-2-ஐ (ஆட்டோமொபைல் ஏற்றுமதி/ இறக்குமதி முனையம்-2 மற்றும் துறைமுகம் அமைக்கத் தூர்வாரும் கட்டம்-5) பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். சரக்குக் கப்பல் தங்குமிடம்-2 திறப்பது நாட்டின் வர்த்தகத்தை வலுப்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கையாகும், இது பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை அதிகரிக்க உதவும்.

இந்த நிகழ்ச்சியின் போது, ரூ.9000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுl திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்து, முக்கியமான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐ.ஓ.சி.எல்) ஐபி 101 (செங்கல்பட்டு) முதல் எண்ணூர் - திருவள்ளூர் - பெங்களூரு - புதுச்சேரி - நாகப்பட்டினம் - மதுரை - தூத்துக்குடி வரை 488 கி மீ நீளமுள்ள இயற்கை எரிவாயு குழாய் திட்டம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் (எச்பிசிஎல்) 697 கிமீ நீளமுள்ள விஜயவாடா-தருமபுரி மல்டிபிராக்ட் (பிஓஎல்) பெட்ரோலிய குழாய் (வி.டி.பி.எல்) திட்டம் ஆகியவை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

மேலும், இந்திய எரிவாயு ஆணையத்தால் (கெயில்) கொச்சி-கூத்தநாடு-பெங்களூர்-மங்களூர் எரிவாயுக் குழாய் 2 (கே.கே.பி.எம்.பி.எல் 2) திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி முதல் கோயம்புத்தூர் வரை 323 கி மீ . இயற்கை எரிவாயுக் குழாய் அமைக்கும் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்படவுள்ளது. அத்துடன் சென்னை வல்லூரில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள தரைவழி முனையத்திற்கான பொது வழித்தடத்தில் மல்டிபிராக்ட் குழாய்கள் அமைத்தல் பணிகளுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார். பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறையின் இந்தத் திட்டங்கள் இந்தப் பிராந்தியத்தில் எரிசக்தி தொழில்துறையில் வீட்டு மற்றும் வணிக தேவைகளை பூர்த்தி செய்வதற்கான ஒரு நடவடிக்கையாகும். இவை இப்பகுதியில் வேலைவாய்ப்பை அதிக அளவில் உருவாக்கவும் வழிவகுக்கும்.

கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் (ஐ.ஜி.சி.ஏ.ஆர்) விரைவு எரிபொருள் மறுசுழற்சி உலையையும் (டி.எஃப்.ஆர்.பி) பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளார். ரூ. 400 கோடி செலவில் உருவாக்கப்பட்ட டி.எஃப்.ஆர்.பி ஒரு தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது உலகிலேயே ஒரே வகையான மற்றும் வேகமான உலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கார்பைடு மற்றும் ஆக்சைடு எரிபொருட்களை மறுசுழற்சி செய்யும் திறன் கொண்டது. இது முற்றிலும் இந்திய விஞ்ஞானிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பெரிய வணிக அளவிலான விரைவான அணு உலை எரிபொருள் மறுசுழற்சி ஆலைகளை உருவாக்குவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக இது அமையும்.

மத்திய அரசு சார்பில், 1.2 லட்சம் சதுர அடியில், 506 மாணவர்கள் தங்கும் வகையில் 253 அறைகளுடன் 4 தளங்களாக திருச்சி என்ஐடி வளாகத்தில் உள்ள புதிய ‘அமெதிஸ்ட்’ விடுதி கட்டப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, என்ஐடி வளாகத்தில் ரூ.41 கோடியில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள மாணவர் விடுதியையும் திறந்து வைக்கவுள்ளார். திருச்சி விமான நிலைய புதிய முனையம் உள்படரூ.19,850 கோடியில் புதிய திட்டத்தை பிரதமர் மோடி இன்று (02-01-24) தொடங்கி வைக்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியில், கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரி அமித்ஷா பங்கேற்க இருக்கின்றனர்.

இதற்கிடையே, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில், 951 கோடி ரூபாயில், புதிய முனையம் அமைக்கும் பணியை கடந்த 2019-ஆண்டு பிப். 10-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக தொடங்கி வைத்தார். விமான நிலைய ஆணையக் குழுமம், 2021ம் ஆண்டு, செப்டம்பர் மாதத்துக்குள் பணிகளை முடித்து, புதிய முனையத்தை செயல்பாட்டுக்குக் கொண்டு வர திட்டமிட்டிருந்தது. ஆனால், கொரோனா பரவல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பணிகள் முற்றுப்பெறாத நிலையில் திறப்பு விழா நடத்தப்படவில்லை. அதனால், 249 கோடி ரூபாய் வரை கூடுதலான நிதி ஒதுக்கப்பட்டு, அதிகமான பணியாளர்களை கொண்டு, கடந்த சில மாதங்களாக இரவு, பகலாக பணிகள் நடைபெற்றது. தற்போது, புதிய முனையம், 60 ஆயிரத்து 723 ச.மீ. பரப்பளவில் 2 அடுக்குகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இதில், ஒரே நேரத்தில் 4,000 பன்னாட்டு பயணிகளையும், 1,500 உள்நாட்டு பயணிகளையும் கையாளக்கூடிய வகையில் கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

குடியேற்றப்பிரிவினருக்கான 40 செக் அவுட் மற்றும் 48 செக் கவுன்ட்டர்கள், விமானங்கள் நிறுத்த 10 ஏப்ரான்கள் மற்றும் ஏரோ பிரிட்ஜ் (விமானத்தில் இருந்து முனையத்தில் நுழையும் பகுதி), 26 இடங்களில் லிப்ட் மற்றும் நகரும் படிக்கட்டுகள் (எஸ்கலேட்டர்), சுங்கத் துறையினருக்கென 3 சோதனை மையங்கள், 15 இடங்களில் எக்ஸ்ரே சோதனை மையங்கள், 3 இடங்களில் வி.ஐ.பி., காத்திருப்பு அறைகளும் இந்த புதிய முனையத்தில் உள்ளன. இது தவிர, விமான நிலைய வளாகத்தில் 1,000 கார்களை நிறுத்தும் வகையில் வாகன நிறுத்தமும் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், நம் நாட்டின் நாகரிகம், கலாசாரம், பண்பாடுகளை பறைசாற்றும் விதமாக, வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. திருவரங்கம் ராஜகோபுரம் போன்ற மாதிரி கோபுரம் புதிய முனையத்தின் முன்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. வருகை, புறப்பாடு , பயணிகள் காத்திருப்பு அறைகள் போன்ற பகுதிகளில், அதிநவீன வசதிகளுடன் உள்கட்டமைப்பு மற்றும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் வகையில் மேற்கூரையுடன் அமைந்த புதிய முனையத்தில், 75 கோடி ரூபாய் செலவில் 42.5 மீ உயரம் கொண்ட கண்காணிப்பு கோபுரத்துடன் கூடிய வான் கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ள இந்த புதிய முனையத்தை, இன்று (ஜன. 2ம் தேதி) பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளார்.

முன்னதாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழாவில், பல்கலைக்கழகத்தில் சிறந்த மாணவர்களுக்குப் பிரதமர் மோடி விருதுகள் வழங்கி உரையாற்றினார். பிரதமர் மோடி, மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி ஆகியோர் வருகையை முன்னிட்டு, திருச்சி டி.வி.எஸ்., டோல்கேட் முதல், பாரதிதாசன் பல்கலைக் கழகம் வரை, 8,000 போலீசாரும், திருச்சி விமான நிலையத்தில், மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், பிரதமரின் சிறப்பு பாதகாப்பு குழ அதிகாரிகள் திருச்சி வந்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்தனர். பிரதமர் வருகையை முன்னிட்டு, 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

நரேந்திரமோடி, திருச்சி வருகை தருவதையொட்டி, கூடுதல் போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். பிரதமர் மோடி திருச்சி வருகை காரணமாக திருச்சியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. திருச்சி விமான நிலைய வளாகம், பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகம் உள்ளிட்டவைகளில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர், துணை ராணுவம், சிறப்பு பாதுகாப்புப் படையினர், கமாண்டோ படையினர், அதிரடிப்படையினர் குவிக்கப்பட்ட னர். மேலும் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் முதல் பாரதிதாசன் பல்கலைக்கழகம் வரை சாலையிலும் சுமார் 4,500 போலீசார் பாதுகாப்புப் பணியில் இரவு பகலாக ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில் இன்று கூடுதல் போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மட்டும், ஒரு கூடுதல் காவல்துறை இயக்குநர் தலைமையில் 2 காவல் துறை தலைவர்கள், 3 காவல்துறை துணைத்தலைவர்கள், 8 காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட சுமார் 3300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் திருச்சி மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து 18 வெடி குண்டு கண்டறியும் பிரிவினர், மோப்ப நாய் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

திருச்சி செம்பட்டு பகுதியிலிருந்து பாரதிதாசன் பல்கலைகழகம் வரை உள்ள சாலையில் தற்காலிகமாக 100 கண்காணிப்பு காமிராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. சத்தியமங்கலத்திலிருந்து வனப்பகுதி சிறப்பு பணிக் குழு வரவழைக்கப்பட்டு பல்கலைக்கழகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். திருச்சி மாநகரத்திலிருந்து பாரதிதாசன் பல்கலைகழகம் வரை உள்ள அனைத்து விடுதிகள், மேன்சன்கள் தனிப்படையினர் மூலம் சோதனைக்குள்ளாக்கப்பட்டு கண்காணித்ததுடன், உயரமான கட்டிடங்களில் பைனாக்குலர் மூலம் கண்காணிப்பு பணியும் மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து, சென்னை,கோவை, சேலம் மற்றும் திருச்சியிலிருந்து சுப்பிரமணியபுரம், விமான நிலையம், மாத்தூர் வழியாக புதுக்கோட்டை, காரைக்குடி,சிவகங்கை, இராமநாதபுரம், ராமேஸ்வரம் செல்லும் பயணிகள் வாகனங்கள் உள்ளிட்ட அனைத்தும் காலை 8 முதல் பிற்பகல் மணி வரை மாற்று வழியில் இயக்கப்பட்டது. மன்னார்புரம் மேம்பாலம், எடமலைப்பட்டிபுதூர், புறவழிச்சாலை சந்திப்பு, விராலிமலை, இலுப்பூர் வழியாக வாகனங்கள் புதுக்கோட்டை சென்றது . எதிர் திசையில் திருச்சி வந்த வாகனங்கள் கட்டியாவயல், இலுப்பூர், விராலிமலை, மணிகண்டம் வழியாக திருச்சிக்கு வந்தது. ஆனால் கல்லூரி வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. கனரக வாகனங்கள் நேற்று (திங்கள்கிழமை) இரவு முதல் இன்று (செவ்வாய்) பிற்பகல் 3 மணி வரை அனுமதி வழங்கப்படாது.

விமானநிலையத்தில் நடைபெற்ற முனையம் திறப்பு விழாவுக்கு சென்ற பொதுமக்கள் அதற்கு உண்டான ஆதாரம் மற்றும் பயண சீட்டுகளை போலீசாரிடம் காண்பித்து செல்லவுள்ளனர். அதுபோல் பல்கலைக்கழத்தில் பட்டம் வாங்கிய மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பல்கலைகழகத்தால் வழங்கப்பட்ட ஆதராத்தை காண்பித்த பிறகு நிகழ்வுக்கு அனுமதிக்கப்படவுள்ளனர். அதுபோல பிரதமரை வரவேற்க பாரதிதாசன் பல்கலைகழகத்துக்கு செல்லும் பாஜக தொண்டர்களின் வாகனங்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT