ADVERTISEMENT

"தவணையை கட்டுங்க... இல்லேன்னா அபராத வட்டி கட்ட வேண்டியிருக்கும்" பெண்களை மிரட்டும் தனியார் நிதிநிறுவனங்கள்!

07:32 AM Jun 02, 2020 | rajavel


கரோனா நோய் தொற்றினை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் 2 மாதங்களுக்கும் மேலாக ஜூன் மாதம் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு அறிவித்து நடைமுறையில் உள்ளது.

ADVERTISEMENT


மூன்று மாதங்களாக நீடிக்கும் ஊரடங்கினால் பொதுமக்கள் வேலைகளுக்கு செல்ல முடியாமலும், வருவாய் இல்லாமலும் தவித்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் மற்றும் ரிசர்வ் வங்கி பொதுமக்கள் வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் பெற்ற கடன் தொகைக்கான வட்டியுடன் கூடிய தவணைத் தொகையை 3 மாத ஊரடங்கு காலம் மற்றும் அதற்கடுத்த 3 மாதம் என 6 மாதத்திற்கு வசூலிக்க கூடாது என்று அறிவித்துள்ளது.

ADVERTISEMENT


ஆனால் பல தனியார் நிதிநிறுவனங்கள் மகளிர் குழுக்களிடம் கொடுத்த கடனை இரண்டு மாதங்களாக வசூலிக்காமல் இருந்த நிலையில் தற்போது ஜூன் மாதம் ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், 'மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான தவணை தொகைகளுடன் ஜூன் மாதத்திற்கான தவணைத் தொகையும் ஒரே தவணையில் கட்டினால் வட்டி இல்லை. அவ்வாறு கட்டவில்லை என்றால் தவணைகள் முடிந்த கடைசி மாதத்திற்கு அடுத்த மாதம் ஊரடங்கு காலமான மார்ச், ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களுக்கான தவணைத் தொகையை அபராத வட்டியுடன் செலுத்த வேண்டியிருக்கும். அதனால் இப்போதே மூன்று மாதத்திற்கான தவணைகளை செலுத்துவது நல்லது' என மறைமுகமாக மிரட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மகளிர் குழு பெண்கள் அதிகாரிகளிடம் புகார்கள் தெரிவித்து வருகின்றனர்.


நேற்று கீழ்கவரப்பட்டு, ஆண்டிப்பாளையம், கடலூர் முதுநகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பெண்கள் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்தனர். அப்போது அவர்கள் திடீரென ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்களது கோரிக்கைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பினர். அதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு வழங்கிட அனுமதித்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது, "நாங்கள் எக்விடாஸ், உஜ்ஜீவன், சான்ட்டின், முத்தூட் பின்கார்ப், ஜனா லோன், லோகு மேனேஜ்மென்ட், மதுரா போன்ற தனியார் நிதி நிறுவனங்களில் சுய உதவி குழு கடன் பெற்றுள்ளோம். கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் கடன் தவணை தொகையை கட்ட வேண்டாம் என்று அரசாங்கங்கள் அறிவித்தன. அதனால் நிதி நிறுவனங்களை சேர்ந்தவர்களும் எங்களிடம் பணம் வசூலிக்க வரவில்லை. இந்த நிலையில் ஊரடங்கு இன்னும் முடியாத சூழ்நிலையில் தற்போது கடன் கொடுத்த நிதி நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள் எங்களிடம் ஜூன் மாதத்தில் மூன்று மாதங்களுக்கான தவணை தொகையை கட்ட வேண்டுமென்றும், அவ்வாறு கட்டவில்லை என்றால் கடைசி மாதத்தில் இந்த மூன்று மாதங்களுக்கான தவணை தொகையுடன் அபராத வட்டி போட்டு கட்ட வேண்டியிருக்கும் என்று மிரட்டுகின்றனர். அரசாங்க உத்தரவை நாங்கள் மேற்கோள்காட்டியும் அவர்கள் அதற்கு செவிசாய்க்கவில்லை. அபராத வட்டி கட்டி தான் ஆக வேண்டும் என்று நிர்ப்பந்தப் படுத்துகின்றனர்.


ஊரடங்கு காலத்தில் நாங்கள் வேலைக்கு செல்லாமல், வருவாய் இல்லாமல் குடும்பத்தை நடத்தவே கஷ்டப்படுகிறோம். எங்களிடம் ஒரே தவணையில் மூன்று மாத தொகைகளையும் கட்ட சொன்னால் எங்களால் எப்படி கட்ட முடியும். இதன் மூலம் அரசாங்கம் அறிவித்த சலுகை எங்களுக்கு எந்த விதத்திலும் பயன்படாமல் எங்களை மேலும் கஷ்டப்படுத்தவே செய்கிறது. எனவே கடன் தவணைத் தொகை கேட்டு நிர்ப்பந்தப்படுத்தும் நிதி நிறுவனங்கள் மீது அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களை இந்த நெருக்கடியில் இருந்து காப்பாற்ற வேண்டும்" என குறிப்பிட்டுள்ளனர்.


தனியார் நிதி நிறுவனங்களின் மறைமுக நெருக்கடியால் பொதுமக்கள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT