/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/elder-woman-flood.jpg)
சேலம் மாவட்டம் கல்வராயன் மலையில் உற்பத்தியாகும் வெள்ளாறு, பெரம்பலூர், கடலூர் மாவட்ட எல்லையின் வழியாக ஓடி கடலில் கலக்கிறது. தற்போது பெய்த மழையினால் வெள்ளாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பெரம்பலூர் மாவட்டம் வதிஸ்டபுரம் கிராமத்தைச் சேர்ந்த பூமாலை என்பவரது மனைவி 75 வயது அழகம்மாள்.நேற்று (19.11.2021) காலை இவர் திட்டக்குடி - அகரம் சீகூர் இடையில் வெள்ளாற்றில் இறங்கி நடந்து சென்றுகொண்டிருந்தார்.
நேற்று முன்தினம் பெய்த மழையின் காரணமாக காலை தொழுதூர் அணைக்கட்டிலிருந்து அதிக அளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதனால் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிவந்தது. இதில் அழகம்மாள் சிக்கிக்கொண்டார். இதைப்பார்த்த கரையில் இருந்தவர்கள் உடனடியாக இதுகுறித்து தீயணைப்பு துறை அலுவலகத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு அலுவலர் வசந்தராஜன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், அப்பகுதி இளைஞர்கள் உதவியுடன் வெள்ளாற்று வெள்ளத்தில் சிக்கித்தவித்த அழகம்மாளை சுமார் ஒருமணி நேரம் போராடி உயிருடன் மீட்டுக் கரைக்குக் கொண்டுவந்தனர். உடனடியாக அழகம்மாளை திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசென்று சேர்த்தனர். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். வெள்ளத்தில் சிக்கிய மூதாட்டியை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்களையும் அப்பகுதி இளைஞர்களையும் பொதுமக்கள் பாராட்டிவருகிறார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)