ADVERTISEMENT

தமிழக பாரம்பரிய உடையில் பிரதமர்; பூரண கும்ப மரியாதையுடன் சாமி தரிசனம்..! 

10:16 AM Apr 02, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தேர்தல் பிரச்சாரத்திற்காக மதுரை வருகை தந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையில் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் இரவு 8.35 மணியளவில் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக அவருக்கு கோவிலின் சார்பாக சிவாச்சாரியார்கள் செந்தில் பட்டர், ஹலாசிநாதர் இருவரும் சேர்ந்து பூரண கும்ப மரியாதை அளித்தனர். மீனாட்சி கோவில் அறங்காவலர் கருமுத்து கண்ணன் அவரை வரவேற்றார்.

கோவிலுக்குள் சென்ற பிரதமர், முன்னதாக மீனாட்சியை வழிபட்டுவிட்டு சுந்தரேஸ்வரரை வழிபட்டார். பின்னர் கோவிலில் உள்ள சிலைகளை ஆர்வத்துடன் கண்டு களித்தார். 9 மணி அளவில் கோவிலை விட்டு வெளியே வந்த பிரதமர், மதுரை பசுமலை அருகே உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு புறப்பட்டுச் சென்றார். இன்று (02.04.2021) காலை 10.30 மணி அளவில் கருப்பாயூரணி அருகே உள்ள அம்மா திடலில் பிரதமர் நரேந்திர மோடி அதிமுக - பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

மோடியின் வருகையையொட்டி கோவிலுக்குள் இரவு 7 மணிக்கு மேல் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. மதுரை மீனாட்சியம்மன் கோவிலைச் சுற்றி மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதற்கு முன்னர் குஜராத் முதல்வராக இருந்தபோது, தனியார் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்க மதுரைக்கு வந்த பிரதமர், தற்போது பிரதமரான பின் முதல்முறையாக மதுரைக்கு வந்து மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT