Skip to main content

மதுரை சித்திரை திருவிழா; கோலாகலமாக துவங்கிய தேரோட்டம்

 

Madurai Meenakshi amman temple Festival

 

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா ஆகியவை ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும் ஒன்று. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கரோனா ஊரடங்கு காரணமாக, பக்தர்கள் அனுமதியின்றி ஆகமவிதிப்படி நடத்தப்பட்ட நிலையில் கடந்த வருடம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு திருவிழா நடைபெற்றது.

 

சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமர்சையாக  கொண்டாடப்பட்டு வருகிறது. லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் ஒன்று கூட, தகதகக்கும் தங்கக் குதிரையில் கம்பீரமாக வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வும் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாகும். 

 

உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணம் நேற்று காலை நடைபெற்றது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து கடந்த 29ம் தேதி மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று (2ம் தேதி) மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் காலை 8.35 மணிக்கு துவங்கி நடைபெற்றது. முன்னதாக நேற்று காலை நான்கு மணி அளவில் சுந்தரேஸ்வரரும் மீனாட்சி அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் சித்திரை வீதியில் வலம் வந்தனர். மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடக்கும் நேரத்தில் ஏராளமான பெண்கள் தங்களது புது தாலியை மாற்றிக்கொண்டனர். 

 

இந்நிலையில் சித்திரைத் திருவிழாவின் 11வது நாளான இன்று (3ம் தேதி) மாசி வீதிகளில் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட பிரமாண்டமான பெரிய தேரில் சுந்தரேஸ்வர் பிரியாவிடை சமேதராக காட்சி அளித்தார். சிறிய தேரில் சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.  

 

கீழமாசி வீதி, வடக்குமாசி வீதி, தெற்குமாசி வீதி, மேலமாசி வீதி என நான்கு மாசி வீதிகளில் தேர்வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கும். சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலை முதலே பக்தர்கள் மதுரையில் குவிந்த வண்ணம் உள்ளனர். லட்சக்கணக்கான பக்தர்களுக்கு இடையே தேர் அசைந்து வருகிறது. தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !