ADVERTISEMENT

சென்னை புறப்பட்டார் பிரதமர் மோடி... 

08:33 AM Feb 14, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க இன்று தமிழக தலைநகரான சென்னைக்கு வருகை தர இருக்கிறார் பிரதமர் மோடி. டெல்லியில் இருந்து விமானத்தில் தற்போது சென்னை புறப்பட்ட நிலையில் 10:35 மணிக்கு சென்னை வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் வருகையை ஒட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம் குறித்து நேற்று அறிவிப்பு வெளியாகி இருந்தது. மதியம் ஒரு மணிவரை 5 மணி நேரம் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது போக்குவரத்து மாற்றம் தொடங்கியது. சென்னையில் மாநகர பேருந்துகள், பொதுமக்களின் வாகனங்கள் 5 மணிநேரம் திருப்பி விடப்படுகின்றன. கனரக வாகனங்கள் சென்னை நகர எல்லைக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அவர், அங்கு பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிகழ்வில் தமிழக முதல்வர், துணை முதல்வர், ஆளுநர், அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர்

சென்னை வரும் பிரதமர் வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் புதிய மெட்ரோ ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் புதிய மெட்ரோ ரயிலில் இன்று மதியம் 2 மணி முதல் இரவு 11 மணி வரை இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 3,370 கோடியில் முடிந்த மெட்ரோ ரயில் பகுதி-1 விரிவாக்க சேவையை தொடங்கி வைக்கிறார். சென்னை கடற்கரை-அத்திப்பட்டு இடையே 4-ஆவது ரயில் பாதையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். துறைமுகத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 293.40 கோடியில் 22.1 கிலோமீட்டர் தூரம் ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பாதை சென்னை துறைமுகம் எண்ணூர் துறைமுகத்தை இணைக்கும் முக்கிய தளங்கள் வழியாக செல்லும். அதேபோல் கல்லணை வாய்க்காலை புதுப்பித்து விரிவாக்கம் செய்யும் பணிகளுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். 2,640 கோடியில் வாய்க்காலை நவீனப்படுத்துவதன் மூலம் தண்ணீர் எடுத்துச் செல்லும் திறன் மேம்படும். விழுப்புரம்-கடலூர்-மயிலாடுதுறை-தஞ்சை பிரிவுகளில் மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதையை தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் ரயில் எரிபொருளுக்கான செலவில் நாளொன்றுக்கு 14 கோடியே 60 லட்சம் மிச்சமாகும்.

அதேபோல் சென்னைக்கு வருகை தரும் பிரதமர், புதிய அர்ஜூன் பீரங்கி வாகனத்தை ராணுவத்திற்கு அர்ப்பணிக்கிறார். சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அர்ஜுன் பீரங்கி 71 புதிய வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT