ADVERTISEMENT

நூல் விலை உயர்வால் முடங்கிய விசைத்தறி உற்பத்தி! -அருப்புக்கோட்டையிலும் வேலை நிறுத்தப் போராட்டம்!

06:13 PM May 27, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஜவுளி உற்பத்தி நகரமாக விளங்கும் அருப்புக்கோட்டையில், நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சிறு குறு மற்றும் நடுத்தர விசைத்தறி நிறுவனங்கள், தங்களது ஜவுளி உற்பத்தியை நிறுத்திவைத்து, இன்று (27-ஆம் தேதி) முதல் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். நூல் விலை உயர்வு தொடர்ந்து, சேலைகள் விற்பனை செய்ய முடியாமல் தேக்கம் அடைந்தது தான், போராடும் நிலைக்குத் விசைத்தறி நிறுவனங்களைத் தள்ளியிருக்கிறது.

கைத்தறித் தொழிலில் போதிய வருமானம் கிடைக்காமல் நலிவுற்றதாலேயே, கைத்தறி நெசவாளர்கள் விசைத்தறிக்கு மாறினார்கள். அருப்புக்கோட்டையில் சுமார் 8 ஆயிரம் விசைத்தறிகள் இயங்கி வருவது, சுமார் 25 ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் சேலைகளின் விலை மலிவு என்பதால், பல மாநில வியாபாரிகளும் கொள்முதல் செய்து வருகின்றனர். தற்போது நூல் விலை ஒவ்வொரு மாதமும் தாறுமாறாக ஏற, நூல் வாங்க முடியாத நிலையில், உற்பத்தி செய்த சேலைகளின் அடக்கவிலையும் கூடியதால், விற்பனையாகாமல் கடும் நெருக்கடியைச் சந்தித்துள்ளனர்.

ஜவுளி உற்பத்தியை அதிகரிக்கவும், நெசவாளர்களின் வாழ்வாதாரத்தைக் காக்கவும், விசைத்தறி நெசவாளர்கள் தமிழக அரசிடம் முன்வைக்கும் கோரிக்கை என்னவென்றால், விசைத்தறி நல வாரியம் அமைப்பது, நெசவாளர்களுக்கு என்று நூல் வங்கி அமைத்து, மானிய விலையில் நூல்களை வழங்குவது, விசைத்தறிகள் அமைத்திட மானியத்துடன் கடன் வழங்குவது, விசைத்தறி நெசவாளர் குடும்பங்களுக்கு தனி மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துவது, விசைத்தறி பயிற்சி மையம் அமைப்பது எனப் பட்டியல் நீள்கிறது.

பருத்திக்கு விதித்த இறக்குமதி வரியை திரும்பப் பெறுவதாக ஒன்றிய அரசு அறிவித்தும் நிலைமை சீராகாமல், பருத்தி நூல் விலை தொடர்ந்து உயர்ந்தபடியே இருக்கிறது. அருப்புக்கோட்டையில் மட்டுமல்ல, ஈரோடு, சேலம், பள்ளிப்பாளையம், ராஜபாளையம் போன்ற ஊர்களிலும் வேலைநிறுத்தத்தில் நெசவாளர்கள் ஈடுபட்டுள்ளதால், பல்லாயிரம் பேர் வேலை வாய்ப்பினை இழக்க நேரிட்டுள்ளது. அதனால், இந்த விவகாரத்தில் பிரதமரே தலையிட்டு தீர்வு காணவேண்டும் என்பதே, விசைத்தறி நெசவாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT