ADVERTISEMENT

கொடுமணலை ஒத்த குறியீடுகளுடன் பானை ஓடுகள், குடுவைகள், முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு!!

11:33 PM Jun 09, 2020 | kalaimohan



தமிழ்நாடு முழுவதும் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய மக்களின் வாழ்விடங்கள், முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டு வருவதுடன் எழுத்து காலத்திற்கு முந்தைய குறியீடுகளுடனான பானை ஓடுகளும் கண்டுபிடிக்கப்பட்டாலும் தொல்லியல் அகழாய்வு செய்யப்படாமல் தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம் மண்ணோடு மண்ணாகிக் கொண்டிருக்கிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT


புதுக்கோட்டை - தஞ்சை மாவட்ட எல்லையில் வில்வன்னி ஆற்றுப்படுகையில் அம்பலத்திடல் என்னுமிடத்தில் தாழிகள், குடுவைகள், கின்னங்கள், சுடுமண் கட்டுமானங்கள், கற்கோடாரி, மற்றும் எழும்பு துணடுகள் கண்டெடுக்கப்பட்டு 15 ஆண்டுகள் கடந்தும்கூட அந்த இடத்தை அகழாய்வு செய்ய கிராம மக்களும், தொல்லியல் ஆய்வாளர்களும் பல முறை கோரிக்கை வைத்தும் இதுவரை மத்திய, மாநில தொல்லியல்துறை கண்டுகொள்ளவில்லை. அதனால் பாதுகாக்கப்படவேண்டிய அம்பலத்திடல் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகளால் சிதைக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில்தான் தஞ்சை மாவட்டம், பேராவூரணி வட்டத்தில் கட்டயன்காடு கிராமத்தில் அக்னி ஆற்றங்கரையில் அய்யனார் கோயில் குளம்குடிமராமத்துப் பணிகள் தொடங்கி நடக்கும் போது தரை மட்டத்தில் இருந்து சுமார் 6 அடி ஆழத்தில் ஆங்காங்கே பழங்கால முதுமக்கள் தாழிகள் காணப்பட்டது. இதனைப் பார்த்த கிராம மக்களும் ஏபிஜெ அப்துல்கலாம் கிராம வளர்ச்சிக்குழு இளைஞர்களும் குறிப்பிட்ட தாழிகள் புதையுண்டுள்ள இடத்தை பாதுகாப்பாக எல்லையிட்டு பாதுகாத்ததுடன் நெல்லை உதவி ஆட்சியர் சிவகுருபிரபாகரன் ஐ.ஏ.எஸ்.-க்கு ( சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் ஒட்டங்காடு) கிராம வளர்ச்சிக்குழு இளைஞர் வீரமணி மூலம் படங்களுடன் தகவல் கொடுத்துள்ளனர்.


இதனை பார்த்த சிவகுருபிரபாகரன் ஐஏஎஸ், தமிழக தொல்லியல் ஆணையர் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்.-க்கு தகவல் அனுப்பியுள்ளார். இந்த தகவலின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்ய தஞ்சை தமிழ்பல்கலைக்கழக தொல்லியல் ஆய்வுத்துறை மூலம் முதல்கட்ட மேலாய்வுக்கு உத்தரவிட்டதையடுத்து பல்கலைக்கழக ஆய்வு மாணவர் கார்த்திகேயன் செய்வாய் கிழமை வந்து ஆய்வு மேற்கொண்டார்.


ஆய்வில் சுமார் 170 செ.மீ வட்டத்தில் சுமார் 20 முதுமக்கள் தாழிகள் வெளியே தெரிந்தது. மேலும் கருப்பு, சிவப்பு, பானை ஓடுகளும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ஆய்வு மாணவரின் மேலாய்வு தொடர்ந்து கொண்டிருந்தபோது அருகில் உள்ள தெற்கு ஒட்டங்காடு கிராமத்திலும் அய்யனார் கோயில் குளத்தில் ஏராளமான பானை ஓடுகள் விரவிக்கிடப்பதாகவும் ஆங்காங்கே தாழிகள் உடைந்து காணப்படுவதாகவும் இளைஞர்கள் தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்படி ஒட்டங்காட்டிலும் மேலாய்வு மேற்கொண்டார்.


அப்போது சில வருடங்களுக்கு முன்பு குளம் மராமத்து செய்யும்போது எடுக்கப்பட்டு இளைஞர்களால் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த தாழிக்குள் இருந்து எடுக்கப்பட்ட சுடுமண் சிவப்பு குடுவையை கொண்டு வந்து கொடுத்தனர். ஒரு நாள் முழுவதும் நடந்த ஆய்வில் சுமார் 2000 ஆண்டுகள் பழமையான தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு பானை ஓட்டில் குறியீடுகள் காணப்பட்டுள்ளது. அந்த குறியீடு எந்த காலத்தை சேர்ந்தது என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். மேலும் அகழாய்வு செய்தால் மேலும் பல சான்றுகள் கிடைக்கலாம் என்றவர் இன்றைய ஆய்வு குறித்து விரைவில் அறிக்கை கொடுத்த பிறகு அதிகாரிகள் ஆய்வு செய்ய வாய்ப்புகள் உள்ளதாக கூறினார்.


இந்த தகவல் அறிந்து பட்டுக்கோட்டை கோட்டாட்சியர், பேராவூரணி வட்டாட்சியர், பேராவூரணி தொகுதி ச.ம.உ. கோவிந்தராசு உள்ளிட்டோர் முதுமக்கள் தாழிகளை பார்வையிட்டனர். இந்த நிலையில் ஒட்டங்காடு ஏபிஜெ அப்துல்கலாம் கிராம வளர்ச்சிக்குழுவினர் தொல்லியல் துறை மூலம் ஆய்வு செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மற்றும் தொல்லியல் துறைக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். விரைவில் தஞ்சை தமிழ்பல்கலைக்கழகத்தின் தொல்லியல் ஆய்வுத்துறை ஆய்வுகள் மேற்கொள்ளப்படலாம் என்று கூறப்படுகிறது.

தெற்கு ஒட்டங்காட்டில் கிடைத்த குறியீடு கொடுமணலில் கண்டெடுக்கப்பட்ட குறியீடுகளை ஒத்துள்ளதாக காண முடிகிறது. அதாவது சுமார் 2600 ஆண்டுகள் பழமையானதாக இந்த குறியீட்டு காலத்தை கணிக்க முடிகிறது. அதாவது கொடுமணல் குறித்த ஆய்வு நூலில் இதே போன்ற குறியீடு கே. டி. எல் 368, கே.டி,எல்,ஜி 380 என்றும் பதிவிடப்பட்டுள்ளது. இந்த ஒப்புமையை காணும்போது ஒட்டங்காடு குறியீடும் சுமார் 2600 ஆண்டுகள் பழமையானதாக கருதலாம்.


எல்லாவற்றுக்கும் விடை காண முழுமையான அகழாய்வே தீர்வு. உயச்சந்திரன் ஐஏஎஸ் நிச்சயம் அகழாய்வுக்கு உத்தரவிடுவார் என்ற நம்பிக்கை கிராம மக்கள் மற்றும் இளைஞர்களிடம் உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT