ADVERTISEMENT

அஞ்சல் துறை தேர்வு ரத்து, தமிழில் தேர்வு எழுத அனுமதி!- திராவிட கழகத்தலைவர் கி.வீரமணி அறிக்கை.

08:31 PM Jul 16, 2019 | santhoshb@nakk…

தமிழ்நாட்டில் அஞ்சல் துறையில் 1000 பணியாளர் இடங்களுக்கான தேர்வை தமிழில் எழுதக்கூடாது; இந்தியிலும், ஆங்கிலத்திலும் தான் எழுத வேண்டும் என்று தேர்வுக்கு முதல் நாள் திடீரென்று மத்திய அரசு அறிவித்தது - கடும் அதிர்ச்சியை அளித்தது. தேர்வு எழுத இருந்தவர்கள் உள ரீதியாக உளைச்சலுக்கு ஆளானார்கள். திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன அறிக்கை வெளியிட்டோம். தேர்வை ரத்து செய்யவேண்டும் அல்லது ஒத்தி வைக்கவேண்டும் என்று அந்த அறிக்கையில் (13.7.2019) வெளியிட்டும் இருந்தோம். நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.,க்கள் கட்சிகளை மறந்து எதிர்ப்புக் குரல் கொடுக்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தோம். அதே போல, இன்று (16.7.2019) நாடாளுமன்றத்தில் தி.மு.க., அ.தி.மு.க. உறுப்பினர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

நேற்று (15.7.2019) தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் இதுகுறித்து தி.மு.க. பிரச்சினையைக் கிளப்பியது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டும் என்று வலியுறுத்தினர். தமிழ்நாடு அரசு அதனை ஏற்காத நிலையில், தி.மு.க., காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர். இந்த எதிர்ப்புகள் எல்லாம் சேர்ந்து மத்திய அரசைப் பணிய வைத்ததன் விளைவாக இன்று (16.7.2019) பிற்பகல் அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டதாக மாநிலங்களவையில் அறிவிக்கப்பட்டது மட்டுமல்லாமல், தமிழ் உள்பட மாநில மொழிகளில் தேர்வு எழுதலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனை வரவேற்கிறோம், பாராட்டுகிறோம். '37 பேர் நாடாளுமன்றத்திற்குள் சென்றால் என்ன சாதிக்க முடியும்?' என்று கேட்டவர்களுக்கு இது தான் சரியான பொருத்தமான பதிலாகும். மாநில உணர்வுகளையும், உரிமைகளையும், மொழிகளையும் மதிக்கும் போக்கு இந்தப் புள்ளியிலிருந்தாவது மத்திய அரசு தொடங்க வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் அழுத்தமான கோரிக்கை.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT