ADVERTISEMENT

பொள்ளாச்சி வழக்கு: மகாத்மா காந்தியின் கருத்தை மேற்கோள் காட்டிய நீதிபதி..! 

03:14 PM Aug 11, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை தினசரி விசாரித்து, விசாரணையை 6 மாதத்தில் முடிக்க கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளைப் பாலியல் கொடுமை செய்தது தொடர்பான விடியோ வெளியானது. அது தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியிருந்தது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியின் சகோதரர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவுசெய்து திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார் என 5 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

பின்னர் இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், அருளானந்தம், ஹேரேன் பால், பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடந்துவரும் நிலையில், வழக்கில் தொடர்புடைய அருளானந்தம் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதி எம். தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ தரப்பில் ஏற்கனவே இந்த வழக்கில் கோவை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாகவும், ஆனால் சில விளக்கங்களை நீதிமன்றம் கேட்டுவருவதாகவும் தெரிவித்தார். சிபிஐ-யில் ஆட்கள் பற்றாக்குறையால், வழக்கு விசாரணை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ விரைந்து முடிக்க தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்க தயாராக இருப்பதாகவும், குறிப்பாக எஸ்.பி. அந்தஸ்திலான அதிகாரியை நியமித்து உதவ தயாராக இருப்பதாகவும் தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று (11.08.2021) தீர்ப்பளித்த நீதிபதி தண்டபாணி, குற்றம்சாட்டப்பட்ட அருளானந்தத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கின் விசாரணையை 6 மாதத்தில் விசாரித்து முடிக்க கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டதோடு, சிபிஐயின் விசாரணைக்கு உதவும் வகையில் சிபிசிஐடி எஸ்.பி. முத்தரசியை நியமித்தும் உத்தரவிட்டார்.

தான் அளித்த தீர்ப்பில் நீதிபதி தன் வேதனையைப் பதிவுசெய்துள்ளார். அவர் கூறியதாவது, “மகாத்மா காந்தி கூறும்போது இரவு நேரங்களில் எப்பொழுது பெண்கள் தைரியமாக நடமாட முடிகிறதோ அப்பொழுதுதான் உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக கருதமுடியும் என்றதை நான் நினைவுகூருகிறேன். ஆனால், தற்போது சமூக விரோதிகளால் பெண்கள் பகலிலே கூட நடமாட முடியவில்லை என்பது வேதனை அளிக்கிறது.” இவ்வாறு நீதிபதி தண்டபாணி தன் தீர்ப்பில் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT