ADVERTISEMENT

வெளியூர் சென்றதால் உயிர் தப்பிய காதல் ஜோடி... வெறிச்செயலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்த காவல்துறையினர்!

06:14 PM Nov 09, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தென்காசி மாவட்டத்தின் சுரண்டை நகரம் அருகேயுள்ள சிவகுருநாதபுரத்தின் பாறையடித் தெருவைச் சேர்ந்தவர் விவேக்குமார் (27). இவருடைய தந்தையான ராதாகிருஷ்ணன் காலமானதால் அவர் நடத்திவந்த காய்கறிக் கடையை தொடர்ந்து நடத்திவருகிறார். எனினும், விவேக்குமாரின் குடும்பத்தினர் ஓரளவு வசதி வாய்ப்பு கொண்டவர்கள்.

விவேக்குமாரும் சுரண்டையைச் சார்ந்த பெரியமாரிதுரையின் மகள் அன்னலட்சுமி (26) இருவரும் பள்ளிப்படிப்பு முதல், ஒன்பது ஆண்டுகளாகவே தொடர்ந்து காதலித்து வந்திருக்கின்றனர். இருவருக்குள்ளேயும் ஆழமான காதல். இருவரும் வெவ்வேறு பிரிவைச் சார்ந்தவர்கள் என்றாலும், இவர்களது காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இதையடுத்து காதலர்கள் நேற்று முன்தினம் சுரண்டை காவல் நிலையத்தில் தஞ்சமடைந்து பாதுகாப்பு கேட்டுள்ளனர். இரு வீட்டாரையும் காவல்நிலையம் வரவழைத்த போலீசார், அவர்கள் இருவரும் திருமண வயது வந்த மேஜரானவர்கள். அதனால் எந்தவிதமான பிரச்சினையும் கூடாது என அறிவுறுத்தி எழுதி வாங்கியுள்ளனராம்.

இதன்பின் நேற்றிரவு திருமணம் செய்து கொண்ட காதலர்கள் உடனடியாக பாதுகாப்பின் பொருட்டு வெளியூர் சென்றுவிட்டதாகத் தெரிகிறது. ஆனால் காதல் திருமண ஜோடி வீட்டில் இருப்பதாகக் கருதிய மர்ம நபர்கள் சிலர், நேற்று நள்ளிரவு விவேக்குமாரின் வீட்டில் அவர்களைத் தீர்த்துக் கட்டும் வகையில் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். இதனால் வீட்டிலிருந்த மின் மோட்டார் பம்ப் செட் மற்றும் பிளாஸ்டிக் குடங்கள் எரிந்து நாசமாகியுள்ளன. இதுகுறித்து விவேக்குமாரின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தடயவியல் நிபுணர்கள் சோதனை நடத்தியுள்ளனர்.

வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய சுரண்டை இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான டீம், கழுநீர்குளத்தின் மதன்குமார், அதே ஊரைச் சேர்ந்த கிருஷ்ணகுமார், சென்னையைச் சேர்ந்த சோமசுந்தரம் மகன் கார்த்திக் மூவரையும் கைது செய்து மேல் விசாரணை நடத்திவருகின்றனர். காதல் திருமணத்திற்கு எதிரான ஆணவப் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் சுரண்டைப் பகுதியைப் பரபரப்பாக்கியிருக்கிறது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT