ADVERTISEMENT

அதிரடி காட்டிய போலீஸ்; மாமூல் ரவுடி கலைக்கு மாவுக்கட்டு

06:01 PM Feb 06, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

வடசென்னை பகுதியில் கடைகளில் மாமூல் கேட்டு பிரச்சனை செய்து வந்த ரவுடிகளை போலீசார் கைது செய்த நிலையில், கலைச்செல்வன் என்ற ரவுடிக்கு காலில் மாவுக்கட்டு போட்டு வீடியோ எடுத்து போலீசார் வெளியிட்டுள்ளனர்.

கலை என்கின்ற கலைச்செல்வன் தலைமையிலான ரவுடி கும்பல் ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு வியாசர்பாடியில் உள்ள கடைகளில் மாமூல் கேட்டு மிரட்டி உள்ளனர். தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பட்டாக்கத்தியுடன் சுற்றித்திரிந்த அந்த கும்பல் அந்த பகுதியில் நின்றிருந்த டாட்டா ஏஸ் வாகனம், கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர். இந்த கும்பல் வியாசர்பாடி மட்டுமல்லாது அண்ணா நகர், செங்குன்றம், புழல் உள்ளிட்ட பல இடங்களில் மாமூல் கேட்டு வியாபாரிகளை அச்சுறுத்தி வந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் வில்லிவாக்கம் வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி சிறை சென்று வந்த இரண்டு பேர் இதுபோன்று மாமூல் கேட்டு மிரட்டல் விடுக்கும் செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த கும்பலுக்கு தலைவனாக கலை என்கின்ற கலைச்செல்வன் இருந்து வந்ததாக போலீசாருக்கு தெரியவந்தது.

மற்ற இருவர் போலீசாரின் வலையில் சிக்கிவிட்ட நிலையில், கலைச்செல்வனை பிடிக்க போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இந்த நிலையில் வீட்டின் மொட்டை மாடி பகுதியில் பதுங்கியிருந்த ரவுடி கலையை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். அப்பொழுது ரவுடி கலை தப்பிக்க முயன்று மாடியில் இருந்து குதித்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதன் பிறகு போலீசார் ரவுடி கலையை மருத்துவமனைக்கு அழைத்து சென்று கையிலும் காலிலும் மாவுக்கட்டு போட்டு விட்டனர். தான் செய்தது தவறு என மன்னிப்பு கேட்கும்படி வீடியோ எடுத்து வெளியிட்டுள்ள காவல்துறையினர், ரவுடி கலையை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT