ADVERTISEMENT

சிறுவர்களை மிரட்டிய போலீஸ் இன்ஸ்பெக்டர்... கொதித்தெழுந்த சமூக ஆர்வலர்கள்..

11:55 AM Sep 21, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெற்றோர்களுடன் கலந்துகொண்ட சிறுவர்களை போலீசார் அதட்டி, மிரட்டி அப்புறப்படுத்த முயன்றதால், போலீசாருக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சமூக ஆர்வலர்கள்.

மண்ணின் மக்களுக்கான போராட்டம், நம்முடைய மகன், மகள்களுக்கான போராட்டம், நம்முடைய அடுத்த தலைமுறைக்கான போராட்டம் என மாணவர்கள் உயிரைக் குடிக்கும் மனுநீதி கல்வி முறையான நீட் தேர்வினை எதிர்த்து நகரின் அனைத்து சமூகநல ஆர்வலர்களின் கூட்டமைப்பு சார்பாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுப்ரமணியபுரத்தில் மத்திய, மாநில அரசிற்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். பி.எல்.ராமச்சந்திரன், பெரியார் முத்து, மாறன், சேதுராஜன், ஜான்பால், கோவிலூர் சரவணன், சகுபர், தமிழ் கார்த்தி உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டத்தில் "நீட் எனும் பெயரில் மாணவர்களை கொன்று புதைக்காதே... நீட் தேர்வினை ரத்து செய்..." என வாசகங்கள் தாங்கிய பதாகைகளை இரு சிறுவர்கள் கையில் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

"உன்னைய யார் இங்கு வரச்சொன்னது..? இது கூடாது தெரியுமா..?" என காரைக்குடி வடக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுந்தர மகாலிங்கம் அதட்டி மிரட்ட நடுங்கினர் இரு சிறுவர்களும். “அவங்களை மிரட்ட நீங்க யார்..? அவர்களுடைய பெற்றோர்களுடன்தான் இங்கு வந்துள்ளனர். நாளைய தலைமுறைக்கானப் போராட்டம் இது" என பதிலுக்கு வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு இன்ஸ்பெக்டருக்கு எதிராகவும் கோஷங்களை முழங்கியது.

இதனால் இப்பகுதியில் பரப்பரப்பு நிலவிய நிலையில், ஆர்ப்பாட்டக் குழுவினர் அங்கிருந்து ஊர்வலமாக சென்று காரைக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் தங்களது கோரிக்கை மனுவை அளித்து கலைந்து சென்றனர். முன்னதாக நீட் தேர்வால் உயிரிழந்த 13 பேருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT