ADVERTISEMENT

கொள்ளையனை தூங்க வைத்த டி.ஆர்; திருட வந்த இடத்தில் சுவாரஸ்யம்

10:46 AM Feb 18, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருட வந்த இடத்தில் டி.ஆர் பாடலைக் கேட்டு அசந்து தூங்கிய திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நடுவிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். இவர் தற்பொழுது காரைக்குடியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், பாண்டியன் தன் சொந்த ஊரான நடுவிக்கோட்டைக்கு திருவிழா மற்றும் விடுமுறை நாட்களில் வந்து செல்வது வழக்கம். மேலும், இங்கு குடும்பத்தோடு வந்து தங்கினால் வீட்டில் சமைப்பதற்கான பாத்திரங்கள் மற்றும் குத்து விளக்கு, மின்விசிறி உள்ளிட்ட பொருட்களை மட்டும் வீட்டில் வைத்துள்ளனர். இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு பாண்டியன் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அந்த வீட்டுக்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது, அந்த வீட்டுக்குள் இருக்கும் ஒரு அறை மட்டும் உள்பகுதியில் பூட்டப்பட்டிருந்தது. மேலும், அந்த அறைக்குள் திருடன் இருப்பதை உறுதி செய்த அப்பகுதி மக்கள் வீட்டின் உரிமையாளர் பாண்டியனுக்கும் போலீசுக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

அதற்குள் இந்த தகவல் ஊருக்குள் பரவ அனைவரும் மிளகாய்ப் பொடி, கம்பு கட்டையுடன் வீட்டைச் சுற்றி வளைத்தனர். அதன்பிறகு, சம்பவ இடத்திற்கு வந்த போலீசும் பாண்டியன் குடும்பத்தினரும் மூடப்பட்டிருந்த மற்றொரு கதவைத் திறந்து பார்த்தனர். அப்போது அந்த அறையில் மது போதையில் இருந்த நபர் ஒருவர், அங்கிருந்த கட்டிலில் ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்தார். இதையடுத்து, போலீசார் அவரை எழுப்பி விசாரித்ததில், அவர் ராமநாதபுரம் மாவட்டம் மேலச்சேந்தனேந்தல் பகுதியைச் சேர்ந்த சுதந்திர திருநாதன் என்பது தெரியவந்தது. இவர் ஏற்கனவே ஒரு குற்ற வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்ற நிலையில், சமீபத்தில் தான் ரிலீஸாகி வந்துள்ளார். இதனிடையே, பூட்டிக் கிடந்த வீட்டை நோட்டமிட்ட சுதந்திர திருநாதன், ஓட்டைப் பிரித்து உள்ளே இறங்கி வீட்டிற்குள் இருந்த பாத்திரங்கள், குத்துவிளக்கு, மின்விசிறி, வெண்கலப் பொருட்கள் என அனைத்தையும் சாக்குப் பையில் பத்திரமாகக் கட்டி வைத்துள்ளார்.

அதன்பிறகு, மது அருந்திய சுதந்திர திருநாதன், ஹெட்ஃபோனில் TR ராஜேந்தரின் காதல் பாடல்களைக் கேட்டுக்கொண்டு, அங்கிருந்த மெத்தையில் சுதந்திரமாகத் தூங்கியுள்ளார். இவர், ஹெட்ஃபோனில் பாட்டு கேட்டுக்கொண்டே தூங்கியதால் வெளியே சத்தம் போட்டது கேட்கவில்லை என விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, சுதந்திர திருநாதனை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து மீண்டும் சிறைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம், சிவகங்கை மக்களை திக்கு முக்காட வைத்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT