ADVERTISEMENT

குற்றவாளியைத் தப்பவிட்ட போலீஸ்!

04:32 PM Jan 29, 2024 | tarivazhagan

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பொறியாளர் பாலமுருகன். இவரின் மனைவி தீபா. மாற்றுத் திறனாளி கணித ஆசிரியரான தீபா, வி. களத்தூர் பள்ளியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த நவம்பர் 15 ஆம் தேதி பள்ளிக்குச் சென்ற தீபா பள்ளி நேரம் முடிந்தும் வீட்டுக்குத் திரும்பி வரவில்லை. தீபாவின் கணவர் பாலமுருகன், பள்ளி உட்படப் பல்வேறு இடங்களில் விசாரித்துவிட்டு வி. களத்தூர் காவல் நிலையத்தில் தனது மனைவியைக் கண்டுபிடித்துத் தருமாறு புகாரளித்தார்.

ADVERTISEMENT

அதே தினம் அறிவியல் ஆசிரியர் வெங்கடேசன் மனைவி காயத்ரி பெரம்பலூர் காவல் நிலையத்தில், ‘பள்ளிக்குச் சென்ற தனது கணவர் வெங்கடேசன் வீடு திரும்பவில்லை கண்டுபிடித்துத் தாருங்கள்' என்று புகாரளித்தார்.

ADVERTISEMENT

ஒரே பள்ளியில் வேலை செய்த இரண்டு ஆசிரியர்களும் மாயமானது பற்றி தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி, நேரடி விசாரணை செய்து ஆசிரியர்களைக் கண்டுபிடிப்பதற்காக கூடுதல் கண்காணிப்பாளர் மதியழகன் தலைமையில் 5 தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். இந்த நிலையில் ஆசிரியர் வெங்கடேசனின் உறவினர்கள், வெங்கடேசன் தேனியில் இருக்கும் தகவலறிந்து அங்கு சென்று அவரை குரும்பலூருக்கு அழைத்து வந்ததுடன் பெரம்பலூர் எஸ்.எஸ்.ஐ பாண்டியனுக்கும் தகவல் தந்தனர்.

அதற்கு எஸ்.எஸ்.ஐ. பாண்டியன், "இப்போது எனக்கு நிறைய பணி இருக்கிறது. நாளைக்கு நீங்களே காவல் நிலையம் அழைச்சிட்டு வாங்க” என்று அலட்சியமாகப் பதில் கூறிவிட்டு, தனது சொந்த அலுவல்களில் மூழ்கிவிட்டார். வெங்கடேசன் குரும்பலூர் வந்துள்ள தகவல் வி. களத்தூர் போலீஸுக்கு தகவல் கிடைத்தும் அவரை கைது செய்வதற்கு முயற்சி செய்யாமல் அலட்சியமாக இருந்துள்ளனர். இதையடுத்து வெங்கடேசன் தலைமறைவானார்.

இந்த நிலையில், கோவை உக்கடம் பகுதியில் ஒரு சிவப்பு நிற கார் 3 நாட்களாக ஒரே இடத்தில் நின்றுள்ளது. அப்பகுதி கடைக்காரர்கள் உக்கடம் காவல் நிலையத்திற்கு தகவலளிக்க, போலீசார் விரைந்து சென்று அந்த காரின் பதிவு எண்ணைக் கொண்டு விசாரணை செய்ததில், அந்த கார் ஆசிரியை தீபாவின் கார் எனக் கண்டுபிடிக்கப்பட்டது. காரின் உள்ளே தாலிக் கயிற்றில் இருந்த காசு, குண்டு ஆகியவை சிதறிக் கிடந்தன. காரின் பின்புற டிக்கியில் ரத்தக் கறையுடன் ஒரு சுத்தியல் கிடந்துள்ளது. மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு கார் இருந்த இடத்தில் சோதனை செய்தனர். எதையும் கண்டறிய முடியவில்லை.

கோவை போலீசார், பெரம்பலூர் மாவட்ட காவல்துறைக்கு தகவலளித்தனர். இதையடுத்து கூடுதல் கண்காணிப்பாளர் மதியழகன் தலைமையில் சென்ற தனிப்படை போலீசார் காரை பெரம்பலூர் கொண்டு வந்தனர். சுத்தியலில் படிந்திருந்த ரத்தக் கறையை மருத்துவப் பரிசோதனை செய்ததில் அது ஆசிரியை தீபாவினுடையது எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தீபா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தொடர்ந்தனர்.

ஒரே பள்ளியில் பணிபுரிந்த வெங்கடேசன், தீபாவின் கணவர் பாலமுருகனிடம் பல லட்சம் பணம் கடனாகப் பெற்றுள்ளார். அந்த பணத்தை திருச்சியிலுள்ள அதிக வட்டி தரும் கம்பெனிகளில் முதலீடு செய்து மாதம்தோறும் தீபாவிற்கு வட்டிப் பணம் கொடுத்துள்ளார். வட்டிப் பணத்தின் மீது ஆசை ஏற்பட்டதன் காரணமாகப் பல லட்சங்களை வெங்கடேசனிடம் கொடுத்துள்ளனர் தீபாவும் அவரது கணவரும். தீபாவைப் போலவே பல்வேறு ஆசிரியர்களிடமும் அதிக வட்டி தருவதாகக் கூறி வெங்கடேசன் பல லட்சம் பணத்தைப் பெற்றுள்ளார்.

ஆரம்பத்தில் அனைவருக்கும் வட்டிப் பணத்தை முறையாகக் கொடுத்து வந்த வெங்கடேசன், பிறகு பணம் கொடுப்பது தாமதமானது. இந்த நிலையில்தான் தீபா, தான் கொடுத்த பணத்தை திரும்பத் தருமாறு பள்ளி நேரத்தில் வெங்கடேசனிடம் சண்டையிட்டுள்ளார். தீபாவை சமாதானப்படுத்திய வெங்கடேசன், நவம்பர் 15 அன்று பள்ளியிலிருந்த தீபாவிடம் தன்னுடன் வந்தால் பணம் முழுவதையும் தருவதாகக் கூறி நம்ப வைத்து காரில் அழைத்துச் சென்றுள்ளார்.

பிறகு நடந்ததைத்தான் மேலே விவரித்துள்ளோம்.

விசாரணையைத் தீவிரப்படுத்திய போலீசார், நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். தீபாவின் காரில், திருச்சி, சமயபுரம், மதுரை, தேனி, ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய சாலைகளில் வெங்கடேசன் மட்டும் தனியாக பயணம் செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. தீபாவை கொலை செய்து மறைத்துவிட்டு ஆசிரியர் வெங்கடேசன் மட்டும் தப்பிச் சென்றுள்ளார். இந்த வழக்கில் வெங்கடேசனுக்கு அடிக்கடி பெண்கள் சப்ளை செய்யும் பாலியல் புரோக்கர் மோகன் என்பவரைப் பற்றித் தெரிந்து அவரைக் கைது செய்து விசாரித்து வருகிறது போலீஸ்.

தீபா காணாமல்போய் 70 நாட்கள் கடந்தும் வெங்கடேசனை இன்று வரை கண்டுபிடிக்காமல் போலீசார் கையைப் பிசைந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் காவல் நிலையத்தில் சரண்டராக வந்த வெங்கடேசனை கைது செய்யாமல், அவர் தப்பிச் செல்ல காரணமாக இருந்த பெரம்பலூர் எஸ்.எஸ்.ஐ. பாண்டியனையும் வி. களத்தூர் எஸ்.எஸ்.ஐ. முகமது ஜியாவுதீன் இருவரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி சஸ்பெண்ட் செய்துள்ளதுடன், விரைவில் வெங்கடேசனைப் பிடிப்போம் என்கிறார்.

வேண்டுமென்றே வெங்கடேசனைத் தப்பவிட்டதா காவல்துறை? தீபாவுக்கு என்ன ஆனது? இதுதான் இப்போது ஊர் மக்களின் கேள்வி.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT