ADVERTISEMENT

‘காவல்துறையினர் லஞ்சம் வாங்க மாட்டார்கள்!’ -தென்மண்டல ஐ.ஜி. நம்பிக்கை!

11:47 PM Jul 01, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

சிவகாசியில் இன்று மழை பெய்துகொண்டிருந்தது. அப்போது, பத்திரிக்கை நண்பர் ஒருவர் “மற்ற மாவட்டங்களில் எப்படியோ? விருதுநகர் மாவட்டத்தில் காவல்துறையினர் லஞ்சம் வாங்குவதே இல்லை. அதனால்தான், மழை பெய்யுது.” என்றார். அவரிடம் சக பத்திரிக்கையாளர் “என்னண்ணே சீரியஸா முகத்தை வச்சிக்கிட்டு ஜோக் அடிக்கிறீங்க?” என்று கேட்டார். உடனே அந்த சீனியர் “போலீஸ் லஞ்சம் வாங்காதது உங்களுக்கு ஜோக்கா தெரியுதா? நீங்க இப்படி பேசுறது மட்டும் தென்மண்டல ஐ.ஜி.க்கு தெரிஞ்சா என்ன நடக்கும் தெரியுமா?” என்று வார்த்தையில் அழுத்தம் தர, “என்னண்ணே நடக்கும்?” என்று அப்பாவித்தனமாக கேட்டார் அந்த நண்பர். “வீட்டுக்கு போலீஸை அனுப்பிருவாரு ஐ.ஜி. அப்புறம் நீங்க அசிங்கப்பட்ருவீங்க” என்றார் சீனியர். அருகிலிருந்த செய்தியாளர்கள் இந்த தகவலைக் கேட்டு புருவம் உயர்த்தினார்கள்.

ADVERTISEMENT


மழை ஜோக் பின்னணி இதுதான் –
கொலை வழக்கில் ஒருவரை விடுவிப்பதற்காக சிவகாசி காவல்துறையினர் லஞ்சம் வாங்கியதாக செய்தி வெளியிட்டது அந்த நாளிதழ். இதைப் படித்து டென்ஷன் ஆன தென்மண்டல ஐ.ஜி.சண்முகராஜேஸ்வரன், விருதுநகர் மாவட்ட எஸ்.பி.ராஜராஜனிடம், “காவல்துறையினர் லஞ்சம் வாங்கியதாக செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். அந்த நாளிதழ் செய்தியாளர்களை சும்மா விடக்கூடாது. காவல்நிலையத்துக்கு அழைத்து விசாரிக்க வேண்டும்.” என்றிருக்கிறார். இதனைத் தொடர்ந்து, சிவகாசி கிழக்கு காவல்நிலைய ஆய்வாளர் சீனிவாசன், உளவுத்துறை போலீசாரிடம், நாளிதழ் செய்தியாளர்கள் இருவரின் பெயர், வயது, முகவரி உள்ளிட்ட விபரங்களைக் கேட்டிருக்கிறார். உடனே, சம்பந்தப்பட்ட செய்தியாளர்களைத் தொடர்பு கொண்ட உளவுத்துறை போலீசார், “ஐ.ஜி.யே சொல்லிருக்காரு. எஸ்.பி. டீடெய்ல்ஸ் கேட்கிறாரு.” என்று சொல்ல, செய்தியாளர்கள் இருவரும் “என்ன சார் மிரட்டுறீங்களா? வீட்டு அட்ரஸ் எதுக்கு கேட்கிறீங்க? எதுன்னாலும், எங்க தலைமை அலுவலகத்தில் கேட்டுக்கங்க?” என்று வீட்டு முகவரி தர மறுத்திருக்கின்றனர்.


இதுகுறித்து காவல்துறை நண்பர் ஒருவர் “முன்ன மாதிரி இல்ல. செய்தியாளர்கள் விஷயத்துல போலீஸோட அணுகுமுறை ரொம்பவே மாறிக்கிட்டு வருது. அரசாங்கத்தைப் பத்தியோ, போலீஸை பத்தியோ எழுதினா, நிருபர்களை ஸ்டேஷனுக்கு கூப்பிட்டு எழுதி வாங்கணும். அப்பத்தான் ஒரு பயம் இருக்கும். பிரஸ்ஸுன்னு சொல்லிக்கிட்டு போலீஸ்கிட்ட இஷ்டத்துக்கு கேள்வி கேட்கிறதெல்லாம் மாறணும்னு மேலிடத்துல இருந்து இன்ஸ்ட்ரக்ஷன் வந்திருக்கு. திருவண்ணாமலையில் செய்தி சேகரித்த நிருபர்களை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்து, விசாரணைங்கிற பேர்ல உட்கார வச்சாங்கள்ல. அதே மாதிரிதான், விருதுநகர் மாவட்டத்துலயும் ஏதாச்சும் பண்ணனும்னு புது ஐ.ஜி. வேகம் காட்டுறாரு. விசாரணைக்கு வாங்கன்னு வீட்டுக்கு போலீஸ் வந்தால், அது அவமானம்னு நிருபர்கள் ஃபீல் பண்ணுவாங்க. போலீஸ் இப்படியும் நடவடிக்கையில் இறங்கும்கிறது தெரிந்தால், மற்ற நிருபர்கள் அடக்கி வாசிப்பாங்க. இந்தக் கணக்கோடுதான், இப்படியெல்லாம் பண்ணுறாங்க.” என்றார்.


தென்மண்டல ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரனின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக, காவல்துறையினர் லஞ்சம் வாங்காமல், நேர்மையாக நடந்துகொண்டால் சரிதான்!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT