ADVERTISEMENT

உள்நாட்டு பாதுகாப்பு தொடர்புடைய வழக்கில் காவல்துறையினர் மெத்தனம்! -உயர் நீதிமன்றம் அதிரடி!

07:03 PM Nov 05, 2019 | kalaimohan

இலங்கையின் தலைநகர் கொழும்புவைச் சேர்ந்தவர்கள் சங்க சிரந்த, முகமது சப்ராஸ். இவ்விருவரும் சட்ட விரோதமாக இந்தியாவில் குடியேறி குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள். இவர்கள் மீது இலங்கையிலும் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்கள் சம்பந்தப்பட்ட வழக்கு விவகாரத்தில் கவனக்குறைவாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது உயர் நீதிமன்றத்தின் மதுரைக்கிளை. மேலும், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர் நீதிபதிகள்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

சங்க சிரந்தாவும் முகமது சப்ராஸும் போலி ஆதார் அட்டை தயாரித்ததாக ராமநாதபுரம் கேணிக்கரை காவல்துறையினர் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, தங்களை இலங்கைக்கு அனுப்பக்கோரி, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் இருவரும் ஆட்கொணர்வு மனுக்களைத் தாக்கல் செய்தனர். இந்நிலையில், ராமநாதபுரம் நீதிமன்றத்தில் இருவரும் தாக்கல் செய்திருந்த வழக்கில் கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, அவர்கள் புழல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

இடைப்பட்ட நேரத்தில் அந்த ஆட்கொணர்வு மனு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு நிலுவையில் இருக்கும்போது எவ்வாறு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்? இது உள்நாட்டு பாதுகாப்பு தொடர்புடைய வழக்கு அல்லவா? என்று கேள்வி எழுப்பி, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.

இன்று அந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் வழக்கறிஞர் ஆஜராகி ‘இந்தியாவிலிருந்து தப்பி ஓடிய இருவரும் இலங்கை நீதிமன்றத்தில் சரணடைந்து சிறைக்காவலில் உள்ளனர்.’ என்று தெரிவித்தார். இதனைப் பதிவு செய்த நீதிபதிகள் ’வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.’ என்று தெரிவித்தனர். மேலும், இந்த வழக்கில் மெத்தனமாகச் செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுத்து, அரசு நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT