ADVERTISEMENT

வாலிபர்களை மிரட்டி கொள்ளையில் ஈடுபட்டவர்களைக் கைது செய்த காவல்துறையினர்!

04:11 PM Dec 15, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகர் பகுதியை ஒட்டி உள்ளது அரசு கலை அறிவியல் கல்லூரி மற்றும் அண்ணா பொறியியல் கல்லூரி. அந்த சாலை வழியே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர்களை வழிமறித்த இரு இளைஞர்கள் அவர்களை கத்திமுனையில் கொலை செய்துவிடுவதாக மிரட்டி அவர்களிடமிருந்து இருசக்கர வாகனம், பணம், செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர். அந்த கொள்ளையில் ஈடுபட்ட இரு இளைஞர்களை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் செஞ்சி அருகே உள்ள கொரட்டுகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த சம்பத்(22) இவரது நண்பன் தாயனூரைச் சேர்ந்த கார்த்தி , ஞானசேகர், சிவா ஆகிய 4 பேரும் கலை அறிவியல் கல்லூரி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த போது 2 மர்ம நபர்கள் கத்தி அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி வழிமறித்து கொள்ளையடித்துள்ளனர்.

அவர்கள் பயணம் செய்த இருசக்கர வாகனம், செல்போன், பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அந்த 2 மர்ம நபர்களும் தப்பிச் சென்றனர். பாதிக்கப்பட்ட நால்வரும் திண்டிவனம் ரோசனை காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். அவர்களது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த மர்ம நபர்களை தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில் சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி அருகே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து குற்றவாளிகளை உறுதி செய்தனர். இந்த நிலையில் நேற்று அதே கல்லூரி சாலையில் காவல்துறை உதவி ஆய்வாளர் வினோத் ராஜ் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்களை போலீசார் வழிமறித்துள்ளனர்.

போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பிச் செல்ல முயன்றனர். அவர்களை சுற்றிவளைத்து போலீசார் கைது செய்தனர். அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ததில் எலவசநூர் கோட்டை, அருகிலுள்ள சீயமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் மகன் புகழ்வாணன், அவரது நண்பன் ஓரகடம் அடுத்த நாவலூர் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் மகன் பார்த்திபன் என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் தான் திண்டிவனம் பொறியியல் கல்லூரி எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேரை மடக்கி செல்போன் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தது அதேபோன்று ஐயன் தோப்பு, சந்தைமேடு, ஆகிய பகுதிகளில் தனியாக சென்ற பெண்களிடம் தாலி செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதையும் ஒப்புக்கொண்டனர்.

பிடிபட்டவர்களிடமிருந்து 10 பவுன் தாலி சரடு, இருசக்கர வாகனம், செல்போன், கத்தி போன்ற ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பிடிபட்ட இருவரும் இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்ல முயன்ற போது காலில் காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பிறகு நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT