ADVERTISEMENT

சென்னை இரண்டாவது விமான நிலைய பணிகளை விரைவுபடுத்த வேண்டும்!ராமதாஸ்

05:05 PM May 17, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT


பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: ’’சென்னை மாநகரம் அனைத்து வழிகளிலும் வளர்ச்சியடைந்து வருகிறது. சென்னை மாநகருக்கு வந்து செல்லும் விமானங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், விமான நிலைய நெரிசலைத் தவிர்ப்பதற்காக இரண்டாவது விமான நிலையத்தை அமைப்பது அவசியமாகிறது.

ADVERTISEMENT

சென்னை விமான நிலையம் ஆசியாவின் மிகவும் பழமையான விமான நிலையங்களில் ஒன்றாகும். நூறாண்டுகளுக்கு முன்பு 1910-ஆம் ஆண்டு ஆசியாவில் தயாரிக்கப்பட்ட முதல் சிறிய விமானத்தை சோதித்துப் பார்க்கும் களமாக பயன்படுத்தப்பட்ட இப்போதைய சென்னை விமான நிலையம், இரண்டாம் உலகப் போரின் போது இராணுவப் பயன்பாட்டுக்கான தளமாக இருந்து, 1972-ஆம் ஆண்டில் தான் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் வணிக அடிப்படையிலான விமான நிலையமாக மாறியது. அப்போது ஒரிரு விமானங்கள் மட்டுமே தரையிறங்கிச் சென்ற சென்னை விமான நிலையத்திற்கு, இப்போது தினமும் 470 விமானங்கள் வந்து செல்கின்றன. ஒவ்வொரு நாளும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் இந்த விமான நிலையம் வழியாக பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்கின்றனர்.

ஒரு காலத்தில் பணக்காரர்களால் மட்டுமே நினைத்துப் பார்க்க முடிந்த விமான பயணம் இப்போது ஏழைகளுக்கும் சாத்தியமாகி விட்டதால், சென்னை விமான நிலையத்தின் பயன்பாடும் அதிகரித்து விட்டது. தேவைக்கு ஏற்றவாறு சென்னை விமான நிலையம் பல்வேறு காலகட்டங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டாலும் கூட, இப்போது கடுமையான நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதைக் குறைக்கும் வகையில், 100-க்கும் குறைவான பயணிகளை ஏற்றிச் செல்லும் ஏடிஆர் வகை விமானங்களை மட்டும் தாம்பரம் விமானப்படைத் தளத்திலிருந்து இயக்குவதற்காக நடவடிக்கைகளில் இந்திய விமான நிலையங்கள் கட்டுப்பாட்டு ஆணையம் ஈடுபட்டிருக்கிறது. இந்த முயற்சி சாத்தியமானாலும் கூட சென்னை விமான நிலையத்தின் நெரிசல் ஓரளவு குறையுமே, முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியாது என்பது தான் உண்மை.

விமான நிலைய நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கையாக ஒருங்கிணைந்த முனையம் அமைக்கப்பட்டு வருகிறது. அதைத் தொடர்ந்து சுரங்கப்பாதையுடன் கூடிய துணை முனையம் ஒன்றும் அமைக்கப்படவுள்ளது. இந்த இரண்டு முனையங்களும் அமைக்கப்பட்டாலும் கூட, அவற்றால் அடுத்த 7 ஆண்டுகளுக்கான பயணிகள் பெருக்கத்தை மட்டும் தான் சமாளிக்க முடியும். அதற்குப் பிறகு சென்னை விமான நிலையத்தை விரிவுபடுத்த முடியாது என்பதால், அடுத்த ஏழு அல்லது எட்டு ஆண்டுகளுக்குள் சென்னையில் இரண்டாவது விமான நிலையத்தை கட்டி முடித்தாக வேண்டும்.

சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கானத் திட்டம் 12 ஆண்டுகளுக்கு முன்பே தயாரிக்கப்பட்டு விட்டது. சென்னை, ஐதராபாத், பெங்களூர், கொச்சி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட நகரங்களில் பசுமைவெளி விமான நிலையங்களை அமைக்க ஒரே நேரத்தில் திட்டமிடப்பட்டது. கொச்சி, ஐதராபாத், பெங்களூர் ஆகிய விமான நிலையங்கள் பத்தாண்டுகளுக்கு முன்பே திறக்கப்பட்டு விட்டன. விசாகப்பட்டினம் பசுமைவெளி விமான நிலையம் வரும் 2022-ஆம் ஆண்டில் தொடங்கப்படவிருக்கிறது.

ஆனால், சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கும் முயற்சியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் தலைவராக இருந்த இராமலிங்கம் அவர்களை பலமுறை எனது வீட்டுக்கு அழைத்தும், தொலைபேசியில் அழைத்தும் இது குறித்தும் விவாதித்துள்ளேன். அவரும் இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டினார். எனினும், அரசுத் தரப்பில் ஒத்துழைப்பு இல்லாதது தான் விமான நிலையம் அமையாததற்கு காரணம்.

சென்னையில் பசுமைவெளி விமான நிலையம் திருப்பெரும்புதூர் அருகே அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் திருப்பெரும்புதூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்கும் திட்டம் இன்று வரை கைகூடவில்லை.

இந்தியாவில் சாதாரண நகரங்களில் கூட இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்பட்டுவிட்டது. ஆனால், இந்தியாவின் நான்காவது பெரிய நகரமான சென்னையில் இன்னும் புதிய விமான நிலையம் அமைக்கப்படாதது தமிழகத்தின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக அமையும். தமிழகத்திற்கு தொழில் முதலீட்டை பெருக்குவதற்காக உலக முதலீட்டாளர்கள் மாநாடு உள்ளிட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அவற்றுக்கு உறுதுணையாக இரண்டாவது விமான நிலையத்தை அமைப்பது உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டியது அவசியம்.

ஒரு கட்டத்தில் கும்மிடிப்பூண்டி, உத்திரமேரூர், மதுராந்தகம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய 4 பகுதிகளில் நிலம் தேர்வு செய்யப்பட்டு விட்டதாகவும், அவற்றில் ஒன்றில் விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. கடைசியாக கிடைத்த தகவல்களின்படி மதுராந்தகத்தை அடுத்த மாமண்டூர் அருகே 3500 ஏக்கரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்படவிருப்பதாக தெரிகிறது.

தமிழகத்தின் வளர்ச்சிக்கு இரண்டாவது விமான நிலைய அவசிய, அவசரத் தேவை என்பதால் அதற்கான பணிகளை மத்திய, மாநில அரசுகள் விரைவுபடுத்த வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து கட்டுமான மற்றும் தொழில்நுட்பப் பணிகளையும் முடித்து சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரவும் அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.’’

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT