ADVERTISEMENT

பா.ம.க. நிர்வாகி வெட்டிக் கொலை: குற்றவாளிகள் மீது நடவடிக்கை தேவை! ராமதாஸ்

09:45 AM Feb 07, 2019 | rajavel



பாமக நிர்வாகி இராமலிங்கம் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். படுகொலையில் சம்பந்தப்பட்ட அனைத்துக் குற்றவாளிகளையும் கைது செய்து கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ADVERTISEMENT

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருபுவனத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் நகரச் செயலாளர் இராமலிங்கம் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். திருபுவனம் பகுதியில் நிகழ்த்தப்பட்டு வந்த மதமாற்றத்தை கடுமையாக எதிர்த்து வந்தார் என்பதற்காக இராமலிங்கத்தை ஒரு கும்பல் கொடூரமாக படுகொலை செய்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

திருபுவனம் வினாயகம்பேட்டையைச் சேர்ந்த இராமலிங்கம் நேற்றிரவு தமது கடையில் வணிகத்தை முடித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது திருபுவனம் புது முஸ்லீம் தெருவில் ஒரு கும்பலால் வழிமறித்து வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். திருபுவனம் பகுதியில் நடந்த மதமாற்றத்தை இராமலிங்கம் தட்டிக் கேட்டதாகவும், அது தொடர்பாக இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த சிலருடன் அவருக்கு மோதல் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதன் காரணமாகவே அவர் கொலை செய்யப்பட்டதாகத் தெரியவருகிறது.

மதமாற்றத்தை எதிர்த்ததற்காக ஒருவரை கொடூரமாக படுகொலை செய்வதை மனசாட்சியுள்ள எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இத்தகைய செயல்கள் மனிதகுலத்திற்கு எதிரானவை. மத நல்லிணக்கத்தைக் குலைத்து மத மோதலை ஏற்படுத்தும் வகையிலான இத்தகைய செயல்களை அனுமதிக்கக் கூடாது. இராமலிங்கம் படுகொலை குறித்த வழக்கின் விசாரணையை சிறப்பு புலனாய்வுப் படையை அமைத்து மேற்கொள்ள வேண்டும். இதன் பின்னணியில் யார் இருந்தாலும் அவர்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டும்.

கொல்லப்பட்ட இராமலிங்கம் குடும்பத்தினருக்கு பா.ம.க. சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இராமலிங்கம் படுகொலையில் சம்பந்தப்பட்ட அனைத்துக் குற்றவாளிகளையும் கைது செய்து கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தமிழக அரசும், மத்திய அரசும் இணைந்து ரூ.1 கோடி நிதியுதவி வழங்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT