ADVERTISEMENT

சென்னையில் பிரதமர் ரோடு ஷோ; கடும் நிபந்தனைகள் விதிப்பு!

12:04 PM Apr 08, 2024 | prabukumar@nak…

கோப்புப்படம்
நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

ADVERTISEMENT

இத்தகைய சூழலில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரைக்காக 6 ஆவது முறையாக பிரதமர் மோடி நாளை (09.04.2024) தமிழகம் வரவுள்ளார். 2 நாள் பயணமாக நாளை தமிழகம் வரும் பிரதமர் மோடி, சென்னை, வேலூர் மற்றும் நீலகிரியில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். பயணத் திட்டத்தின் படி கேரள மாநிலம் பாலக்காட்டில் தேர்தல் பரப்புரையை முடித்துக்கொண்டு நாளை மாலை பிரதமர் மோடி சென்னை வருகிறார். சென்னை தியாகராயர் நகரில் பாண்டிபஜார் முதல் தேனாம்பேட்டை வரை வாகனப் பேரணி (ரோடு ஷோ) மேற்கொள்கிறார். இந்த தேர்தல் பரப்புரையின் போது தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், வட சென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜ், மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் பி. செல்வத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து அன்று இரவு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார்.

ADVERTISEMENT

அதனைத்தொடர்ந்து நாளை மறுநாள் (10.04.2024) காலை 10.30 மணிக்கு வேலூர் புறப்பட்டுச் செல்கிறார். அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் கலந்து கொண்டு பாஜக சார்பில் வேலூரில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி. சண்முகத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார். அதன் பின்னர் பிற்பகல் 01.45 மணிக்குக் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு புறப்பட்டுச் செல்கிறார். அங்கு நீலகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மத்திய இணை அமைச்சர் எல். முருகனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். அதன் பின்னர் பிரதமர் மோடி அங்கிருந்து மகாராஷ்டிரா புறப்பட்டுச் செல்கிறார்.

இந்நிலையில் சென்னை தியாகராயர் நகரில் நாளை நடைபெற உள்ள பிரதமர் மோடியின் ரோடு ஷோவுக்கு சென்னை காவல்துறை 20 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி ரோடு ஷோவின் படி, “தொண்டர்கள் பட்டாசுகள் வெடிக்கக் கூடாது. பேனர்கள் மற்றும் அலங்கார வளைவுகள் அமைக்கக் கூடாது. வெறுப்புணர்வை தூண்டும் வகையில் முழக்கங்களை எழுப்பக் கூடாது. எந்த பதாகைகளையும் ஏந்திச் செல்லக் கூடாது. ரோடு ஷோவின் போது உரையாற்ற அனுமதி இல்லை. குண்டு துளைக்காத வாகனங்களை மட்டுமே பிரதமர் ரோடு ஷோவில் பயன்படுத்த வேண்டும். அனுமதிக்கப்பட்ட பாதையில் மட்டுமே ரோடு ஷோ நடத்த வேண்டும். அப்போது வேறு எந்த நிகழ்ச்சியும் நடத்தப்படக் கூடாது. இந்த நிபந்தனைகளை மீறினால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT