Skip to main content

பிரதமர் மோடியின் ரோடு ஷோவில் விதிமீறல்; போலீசார் வழக்குப்பதிவு!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
police filed a case for PM Modi's road show

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இத்தகைய சூழலில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரைக்காக 6 ஆவது முறையாகப் பிரதமர் மோடி நேற்று முன்தினம் (09.04.2024) சென்னை வந்திருந்தார். 2 நாள் பயணமாகத் தமிழகம் வந்த பிரதமர் மோடி, பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து சென்னையில் ரோடு ஷோவில் ஈடுபட்டார். சென்னை தியாகராயர் நகர் பனகல் பார்க் பகுதியில் இருந்து தேனாம்பேட்டை வரை இரண்டு கிலோமீட்டருக்கு ரோடு ஷோ நடைபெற்றது. பாஜக வேட்பாளர்கள் தமிழிசை, வினோஜ் பி செல்வம், பால் கனகராஜ் ஆகிய வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி வாக்கு சேகரித்தார். பிரதமர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சிக்காக தியாகராயர் நகரில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் சென்னை தியாகராயர் நகரில் நடந்த பிரதமர் மோடியின் ரோடு ஷோவில் விதிமீறல் நடந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை போலீஸ் சார்பில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை மீறி விளம்பர பதாகைகளை வைத்ததாக தேர்தல் பறக்கும் படை அதிகாரி புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் மாம்பலம் மற்றும் பாண்டி பஜார் காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

முன்னதாக சென்னை தியாகராயர் நகரில் நடைபெற்ற பிரதமர் மோடியின் ரோடு ஷோவுக்கு சென்னை காவல்துறை 20 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி இருந்தது. அதன்படி ரோடு ஷோவில் “தொண்டர்கள் பட்டாசுகள் வெடிக்கக் கூடாது. பேனர்கள் மற்றும் அலங்கார வளைவுகள் அமைக்கக் கூடாது. வெறுப்புணர்வை தூண்டும் வகையில் முழக்கங்களை எழுப்பக் கூடாது. எந்த பதாகைகளையும் ஏந்திச் செல்லக் கூடாது. ரோடு ஷோவின் போது உரையாற்ற அனுமதி இல்லை. குண்டு துளைக்காத வாகனங்களை மட்டுமே பிரதமர் ரோடு ஷோவில் பயன்படுத்த வேண்டும். அனுமதிக்கப்பட்ட பாதையில் மட்டுமே ரோடு ஷோ நடத்த வேண்டும்.  அப்போது வேறு எந்த நிகழ்ச்சியும் நடத்தப்படக் கூடாது. இந்த நிபந்தனைகளை மீறினால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்