ADVERTISEMENT

தமிழ்நாடு சட்டப்பேரவையும், தலைவர்களின் படங்களும்....

10:49 AM Aug 02, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் திருவுருவப்படம் திறக்கப்பட உள்ள நிலையில், அங்கு ஏற்கனவே இடம்பெற்றுள்ள பிற தலைவர்களின் படங்கள் குறித்து பார்க்கலாம்.

தேசத்திற்குத் தொண்டாற்றிய தலைவர்களை நினைவுக்கூறும் வகையிலும், அவர்களது சேவையினைக் கவுரவப்படுத்தவும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தலைவர்களின் திருவுருவப்படங்கள் வைக்கப்படுகின்றன. அந்த வகையில் 1948ஆம் ஆண்டு, ஜூலை 24ஆம் தேதி முதன்முதலாக தேசத்தந்தை மகாத்மா காந்தியின் திருவுருவப் படத்தை அப்போதைய சென்னை மாகாண கவர்னர் ஜெனரல் ராஜாஜி திறந்துவைத்தார். இது சட்டப்பேரவையில் இடம்பெற்ற முதல் படம்.

1948ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23இல் இராஜாஜியின் உருவப்படத்தை, அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேரு திறந்துவைத்தார். சட்டப்பேரவையில், ஒரு தலைவர் உயிருடன் இருக்கும்போது அவருக்குத் திறக்கப்பட்ட உருவப்படம் என்றால் அது இராஜாஜயின் படம் மட்டுமே.

பின்னர், 1964ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் தேதி திருவள்ளூரின் திருவுருவப் படத்தை, அப்போதைய குடியரசுத் துணைத் தலைவர் ஜாகீர் ஹுசேன் திறந்துவைத்தார். இதன் பின் 1969ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி அண்ணாவின் உருவப்படத்தை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி திறந்துவைத்தார்.

இதைத் தொடர்ந்து, 1977ஆம் ஆண்டு முதல் 1987ஆம் ஆண்டு வரை எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது 5 தலைவர்களின் உருவப்படங்கள் சட்டப்பேரவையில் திறக்கப்பட்டன. முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் உருவப்படம், சட்டப்பேரவையில் 1977ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி அப்போதைய குடியரசுத் தலைவரால் திறக்கப்பட்டது. பெரியார், அம்பேத்கர், முத்து ராமலிங்க தேவர், காயிதே மில்லத் ஆகியோரின் படங்கள் ஒரே நேரத்தில் 1980ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி திறக்கப்பட்டன. இந்தப் படங்களை அப்போதைய கேரள ஆளுநர் ஜோதி வெங்கடாஜலம் திறந்துவைத்தார்.

1992ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி அன்று எம்.ஜி.ஆரின் உருவப்படத்தை அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா திறந்துவைத்தார். இதற்கு அடுத்தபடியாக, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் படம், கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி அன்று அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி ராமசாமி படையாட்சியாரின் படத்தை அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

2021ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி அன்று வ.உ.சி., ப. சுப்பராயன், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் ஆகியோரின் உருவப் படங்களையும் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

அதன் தொடர்ச்சியாக, இன்று (02/08/2021) மாலை 05.00 மணிக்கு சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் திருவுருவப் படம் திறக்கப்பட உள்ளது. இதையடுத்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில் உள்ள படங்களின் எண்ணிக்கை 16 ஆக உயர உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT