ADVERTISEMENT

1 லி., பெட்ரோல் 200 ரூபாய், 1 மெழுகுவர்த்தி 20 ரூபாய்... எரிகிற டெல்டாவில் பிடுங்கும் சில வியாபாரிகள்!

06:17 PM Nov 26, 2018 | kirubahar

ADVERTISEMENT

2016ல் வர்தா புயலால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து சென்னை மீண்டது. ஆனால், அது இழந்த மரங்கள், ஏற்பட்ட சுற்றச் சூழல் பாதிப்பிலிருந்து இன்னும் மீளவில்லை என்றே சொல்லலாம். பிறகு அதைப்போல ஒரு மிகப்பெரிய பாதிப்பிலிருந்து மெல்ல மீண்டு கொண்டிருக்கிறது டெல்டா. 1952ல் வீசிய நந்தன வருட புயலுக்கு பின் மிகப்பெரிய புயல் என வேதாரண்யம் மக்களால் கூறப்படும் இது, பல்லாயிரக் கணக்கானோரின் வாழ்க்கையை புரட்டிப்போட்டு சென்றுள்ளது. இதில் கடற்கரைக்கு மிக அருகிலுள்ள வேதாரண்யம், புஷ்பவனம், கத்தரிப்புலம், கரியாப்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகள் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள், லட்சக்கணக்கான மரங்கள் என வரலாறு காணாத பேரழிவாகவே உள்ளது இந்த கஜா புயல்.

ADVERTISEMENT

நெல்லுக்குப் பிறகு வருமானம் தரும் பயிராக டெல்டா மக்களால் அதிக அளவு வளர்க்கப்பட்டது தென்னையும், முந்திரியும். இவையும் இந்தப் புயலிலிருந்து தப்பிக்கவில்லை. ஆடுகள், மாடுகள் என ஆயிரக்கணக்கான வளர்ப்பு பிராணிகளையும் இழந்து தத்தளித்த அந்த மக்களுக்கு, அரசாங்கத்தின் நிவாரண உதவிகள் கிடைக்கும் முன்னரே உதவிக்கரம் நீட்டியது மற்ற மாவட்டங்களை சேர்ந்த மக்கள்தான். பல்வேறு மாவட்டங்களில் இருந்து உதவிகள் குவிந்து வரும் நிலையில், கடந்த இரண்டு நாட்களாகத்தான் அந்த உதவிப் பொருட்கள் கடைமடை பகுதிகளை சென்றடைய ஆரம்பித்திருக்கின்றன.

இதுபோல பல்வேறு திசைகளில் இருந்து உதவிகள் வந்தாலும், 2015 வெள்ளத்தின் போது சென்னையில் நடந்தது போல டெல்டாவிலும் நடக்கிறது. ஒரு சில பேராசை பிடித்த வியாபாரிகள் இந்த நேரத்தை உபயோகித்துக்கொண்டு பிளாக்கில் ஒரு லிட்டர் பெட்ரோல் 200 ரூபாய், ஒரு மெழுகுவர்த்தி 20 ரூபாய் எனவும் அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கும் விற்கிறார்கள். இதை விட ஒரு படி மேல் சென்று ஜெனெரேட்டர் மூலம் கைபேசிக்கு சார்ஜ் போட்டுத் தர 30 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. ஆனால் இப்படி இருக்கும் அதே ஊரில்தான் காசு வாங்காமல் இரவு பகலாக இலவச மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களும், தேவையான உணவுப் பொருட்களை விலையின்றி எடுத்து செல்ல சொல்லும் கடைக்காரர்களும் கூட இருக்கின்றனர்.

எது எப்படியோ, நம் அனைவருக்கும் உணவளிக்கும் டெல்டா விவசாயிகள் விரைவில் மீண்டு வர வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பமாக உள்ளது. விருப்பத்தோடு மட்டும் விடாமல், நம்மால் முடிந்த உதவிகளை செய்தால் நிச்சயம் அவர்களது மீட்சி வெகு விரைவானதாகவே இருக்கும்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT