ADVERTISEMENT

செல்லமகள் சோபியா..!

11:09 AM Sep 06, 2018 | nagendran


நாடு முழுமைக்கும் நாங்கள் வைத்தது தான் சட்டம் என அதிகார செருக்குடன் வலம் வந்த பா.ஜ.க.விற்கு எதிராக, "பாசிச பா.ஜ.க. ஒழிக.!" எனும் ஒற்றை வார்த்தையினைக் கேட்டு இந்தியாவிற்கே செல்ல மகளாகியிருக்கின்றார் தூத்துக்குடியை சேர்ந்த சோபியா.!

93 A/2 கந்தன் காலனி 2வது தெரு இலக்கம் கொண்ட எண்ணில் வசிக்கும் சோபியாவின் தந்தை அய்யாப்பிள்ளை சாமி எனும் A.சாமி ஓய்வுப்பெற்ற மருத்துவர்.! தாய் மனோகரி ஓய்வுப்பெற்ற செவிலியர்.! அண்ணன் கிங்க்ஸ்டன் வேலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மருத்துவர். திருமணமாகி அங்கேயே செட்டிலாகிவிட, தாயும், தந்தையும் மட்டுமே அந்த வீட்டினில் வசித்து வந்துள்ளனர். "தூத்துக்குடியில் இருக்கின்ற ஹோலிகிராஸ் கான்வெண்டில் தான் பள்ளி உயர்நிலைக் கல்வியை முடித்தார் சோபியா. அதன் பின், டெல்லியில் இளங்கலை இயற்பியல் படித்தவர் ஜெர்மனி மற்றும் கனடாவில் முதுநிலைப்பட்டமும் பயின்றுள்ளார். பின்னாளில் கனடாவிலுள்ள மான்ட்ரியோ பல்கலைகழகத்தில் எம்.எஸ்.பயின்றுள்ளார். முனைவர் பட்டத்திற்கு இணையான அந்தப் படிப்பினில் தற்பொழுது வாய்மொழித் தேர்வினை நிறைவு செய்துவிட்டு, விடுமுறைக்காக தூத்துக்குடி வந்திருக்கின்றார். வந்த இடத்தில் தான் இப்பிரச்சனை.! இன்னொன்று அவர் சிறுவயதிலிருந்தே நேர்மறையானப் போராட்ட சிந்தனையைக் கொண்டவர். இதை அவர் பொருட்டாகவே எண்ணவில்லை." என்றார் அவருடைய உறவினரான பேராசிரியர் ஒருவர்.

ADVERTISEMENT


கவுண்டமணி செந்திலைப் பார்த்து கேட்பது போல், "எதுக்கு என்னையப் பார்த்து அந்தக் கேள்வியைக் கேட்டே..? எப்படி நீ பாசிச பா.ஜ.க. ஒழிகன்னு சொல்லுவே.?" என இந்த கேள்வியை பத்து தடவைக்கும் மேல் தூத்துக்குடி வாகைகுள விமான நிலைய லாபியில் இருந்த சோபியாவை கண்டு கொதித்தெழுந்து இந்தக் கேள்வியை கேட்டிருக்கின்றார் பா.ஜ.க. மாநிலத் தலைவரான தமிழிசை சௌந்தரராஜன். என்ன.? ஏது..? என அறியாமலேயே தொண்டர்களும், அவருடன் சேர்ந்து கோரஸ் பாட, அவர்களாலேயே பாசிச பா.ஜ.க. ஒழிக.! என வெளிவந்து தான் உண்மையே.!! அப்படி என்ன தான் நடந்தது..?

"சென்னை டூ தூத்துக்குடி செல்லும் இண்டிகோ விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த தமிழிசையை பார்த்ததுமே, "இந்த விமானத்தில் தமிழிசை பயணிக்கின்றார்.! என்ன செய்யலாம்..?" என உடனடியாக டுவிட் போட்டார் சோபியா.! அதற்கு ஒருவர் விமானத்தில் இருந்து குதித்து விடு என பின்னூட்டம் போட, அருகிலிருந்த தன்னுடைய அம்மாவிடம் தமிழக, மத்திய அரசுப் பற்றி அரசியல் பேச ஆரம்பிக்க, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடுப் பற்றிய பேச்சும் வந்திருக்கின்றது. இதெல்லாம் அரசா.? மத்தியில் ஆளும் பா.ஜ.க.விற்கு தேவையா..? பாசிச பா.ஜ.க.. ஒழிக என கத்தனும் போல் இருக்கு.!" என சப்தமாகவே பேசியிருக்கின்றார் அவர். இதைக் காது கொடுத்து கேட்ட தமிழிசை அங்கு ஏதும் கேட்காமல், கீழே இறங்கியவுடன் தன்னுடைய தொண்டர் படையை வைத்துக் கொண்டு சோபியாவை வம்பு இழுத்திருக்கின்றார். மன்னிப்பு கேட்க சொன்னார்கள். அந்த பெண் மசியவில்லை. அதன் பின் கோபமடைந்து தான் பாசிச பா.ஜ.க. ஒழிகன்னு கத்துச்சு.!" என்றார் விமானத்தில் பயணம் செய்த சக பயணி.!!

முதல் நாள் இரவு 10.30 மணிவரை போலீஸ் கஸ்டடியிலேயே இருந்த மறு நாள் ஜாமீன் பெற்று வீட்டிற்கு சென்ற நிலையில், "சோபியாவின் டுவீட்டர் பக்கத்தினைப் புரட்டினால் மக்களுக்கு எதிரான, மக்களைப் பாதிப்படையக்கூடிய தூத்துக்குடி ஸ்டெர்லைட், எட்டுவழிச்சாலை, மீத்தேன் திட்டம் என தமிழக மற்றும் மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிராகப் பதிவிட்டும், எதிர்வாதம் செய்யக்கூடிய கட்டுரைகளை பகிர்ந்தும், "தான் மக்களுக்காகப் போராடுபவர் தான்.!" எனும் தன்னுடைய நிலைப்பாட்டை பகிர்ந்துள்ளார். கூடுதலாக செயற்பாட்டாளர்கள் திருமுருகன் காந்தி, வளர்மதி கைதிற்கு எதிராக டுவிட்டுக்களை தட்டியவர், சமீபத்தில் பிரதமர் மோடியைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியவர்கள் என கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும் டுவிட்டியிருக்கின்றார். சமூக அச்சுறுத்தலுக்கு எதிராக செயல்படும் எந்த நிகழ்வையும் விடவில்லை சோபியா.!! இதைக் காரணம் காட்டியே அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறை வைக்க துடிக்கின்றது மத்திய அரசு. நிகழ்விற்கு முந்தைய தினம் வரை அவர் வேறாக இருக்கலாம். இப்பொழுது அவர் எங்களது செல்ல மகள்.! "என்கின்றனர் சமூக செயற்பாட்டாளர்கள்.

வாயில் சுடப்பட்டு இறந்த ஸ்னோலின் ஆவி தான் சோபியாவின் உடலில் புகுந்து பேசுகிறதோ.? என அறிவியலைத் தாண்டிய வழக்காடல்கள் உண்டு.!! எனினும், அதுவும் உண்மையாக இருந்தால் நல்லது என சிலாகிக்கின்றனர் தூத்துக்குடி மக்கள்.!!

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT