தமிழகத்திற்கு வருபவர்களை திரும்பிப்போ என்று சொல்வது தமிழ் கலாச்சாரம் கிடையாது என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

போலி பகுத்தறிவுவாதி என்று கூறுவது சினிமா விமர்சனம் இல்லை, அரசியல் விமர்சனம். தமிழகத்தில் எந்த தாமரை மலரப்போகிறது என்று கேட்கிறார். ஆழ்வார்பேட்டை ஆண்டவருக்கே இந்த அளவிற்கு எண்ணம் இருந்தால் 21 மாநிலங்களில் ஆண்டு கொண்டு இருக்கிற கட்சிக்கு எண்ணம் இருக்காதா? எனக்கு உரிமையில்லை என்று சொல்வதற்கு அவருக்கு உரிமை இல்லை.

Advertisment

ஜி.எஸ்.டி.யில் மிகப்பெரிய தொகை கிடைத்த மாநிலங்களில் தமிழகம் உள்ளது. ஓராண்டில் பல நல்ல திட்டங்கள் தமிழகத்திற்கு வர உள்ளது. மத்திய-மாநில அரசு உறவு சுமுகமாக இருந்தால் தான் மக்களுக்கு திட்டங்களை கொண்டு வரமுடியும். ஊழலை பற்றி பேச திமுகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் தார்மீக உரிமை இல்லை. இவர்கள் ஊழலில் திளைத்தவர்கள்.

தமிழகத்திற்கு வருபவர்களை திரும்பிப்போ என்று சொல்வது தமிழ் கலாச்சாரம் கிடையாது. மாநில உரிமைகளை மத்திய அரசு பறிப்பதாக கூறும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஜி.எஸ்.டி.யில் புதுச்சேரிக்கு ரூ.1,400 கோடி வந்திருப்பதாக கூறியுள்ளார். மாநில சுயாட்சி எங்கும் பறிக்கப்படவில்லை. மாநில அரசுகளின் நிலைகளை கேட்டு தான் எந்த திட்டமும் நிறைவேற்றப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisment