ADVERTISEMENT

செல்ஃபோன் டவர் வைப்பதாகக் கூறி 4.50 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்...

06:14 PM Sep 24, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்து உள்ளது வாணியங்குப்பம். இந்த ஊரைச் சேர்ந்தவர் துளசிதரன், வயது 51. கடந்த மார்ச் 21ஆம் தேதி துளசிதரனை மொபைல் ஃபோனில் தொடர்பு கொண்ட ஒருவர் தனது பெயர் பார்த்தசாரதி என்றும் தனியார் மொபைல் கம்பெனி சார்பில் செல்ஃபோன் டவர் அமைப்பதற்கு இடம் தேடி வருவதாகவும் அதற்கான இடம் தங்கள் ஊரில் இருந்தால் கூறுமாறும் கேட்டுள்ளார்.

அடுத்த சில தினங்களில் துளசிதரனை நேரில்வந்து சந்தித்த அந்த நபர், தான் சென்னையில் இருந்து வருவதாகவும் மொபைல்ஃபோன் டவர் அமைப்பதற்கான இடம் இருந்தால் காட்டுமாறும் அந்த இடத்திற்கு வாடகையாக மாதாமாதம் பணம் தரப்படும் என்று ஆசை வார்த்தைக் கூறியுள்ளார். அதனை நம்பிய துளசிதரன், தனது இடத்தை செல்ஃபோன் டவர் வைப்பதற்கு காண்பித்துள்ளார். அந்த நபர் துளசிதரனிடம், உங்களது இடம் டவர் அமைக்க ஏற்றதாக உள்ளது என்று கூறியதோடு, இந்த இடத்திற்கான பத்திரம், ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகத்தின் நகல் ஆகியவற்றைக் வாங்கிச் சென்றுள்ளார்.

பிறகு, அந்த இடத்தில் டவர் அமைப்பதற்கு டிராய் என்ற அமைப்பிடம் அனுமதி வாங்க வேண்டும். அதற்கு 12,500 ரூபாய் பணம் செலுத்த வேண்டும். மேலும் நீங்கள் எங்கள் கம்பெனியின் பங்குதாரராக ஆவதற்கு மூன்று லட்ச ரூபாய் பணமும் டெக்னிக்கல் டிபார்ட்மென்ட்டுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணமும் கட்ட வேண்டும். அதைக் கட்டினால் இந்த இடத்திற்கு மாத வாடகை 7,500 ரூபாய் வழங்கப்படும். நீங்கள் கட்டிய பணத்தில் அப்ரூவல் வாங்குவதற்கு செலுத்தப்பட்ட பணம் மட்டும் திரும்பக் கிடைக்காது. மற்ற தொகை அனைத்தும் சில நாட்களில் உங்கள் வங்கிக் கணக்கில் திரும்பவரவு வைக்கப்படும் என்று கூறியுள்ளார்.

இதனை நம்பிய துளசிதரன், 4 லட்சத்து 62 ஆயிரத்தி 500 ரூபாய் பணத்தை பார்த்தசாரதி என்ற பெயரில் உள்ள வங்கிக் கணக்கில், தவணை முறையில் செலுத்தி உள்ளார். அதன் பிறகு பார்த்தசாரதி என்ற அந்த நபரை தொடர்பு கொண்டபோது, கரோனா பரவல் காரணமாக டவர் அமைக்கும் பணிகள் தள்ளிப் போவதாக தெரிவித்துள்ளார். அடுத்தடுத்த நாட்களில் அந்த நபரின் ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்துள்ளது. இதுகுறித்து திருநாவலூர் போலீசில் துளசிதரன் புகார் கொடுத்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து நூதன முறையில் விவசாயி துளசிதரனிடம் மோசடி செய்த அந்த மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT