ADVERTISEMENT

அக்.2- ல் கிராம சபைக் கூட்டம் நடத்த அனுமதி! 

11:46 AM Sep 25, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

வரும் அக்டோபர் 2- ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று கிராம சபைக் கூட்டங்களை நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து, தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்தின் ஆணையர் தாரேஸ் அஹமது இ.ஆ.ப., அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், அக்டோபர் 2- ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். கிராம சபைக் கூட்டத்தினை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி காந்தி ஜெயந்தி அக்டோபர் 2- ஆம் தேதி அன்று காலை 11.00 மணியளவில் நடத்த வேண்டும். அரசாணையில் குறிப்பிட்டுள்ளவாறு குறைவெண் வரம்பின்படி உறுப்பினர்களின் வருகை இருப்பதை உறுதி செய்து கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

அரசாணையில் குறிப்பிட்டுள்ள பொருள்களுடன் வரும் அக்டோபர் 2- ஆம் தேதி அன்று நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டியப் பொருட்கள் விபரங்கள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், அனைத்து கிராம மக்களும் ஆர்வத்துடன் எதிர்வரும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துக் கொள்ள ஏதுவாக கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ள இடம், நேரம் ஆகியவற்றை கிராம மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

கிராம சபைக் கூட்டங்கள் மதச்சார்புள்ள எந்தவொரு வளாகத்திலும் நடந்திடக் கூடாது. கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் இடத்தை முன்கூட்டியே ஊரகப் பொதுமக்களுக்கு தெரியப்படுத்திட வேண்டும். கிராம சபைக் கூட்டத்திற்கான செலவின வரம்பு ரூபாய் 5,000 ஆக உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது.

மேலும், அக்டோபர் 2- ஆம் தேதி அன்று நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெற உரிய நடவடிக்கை எடுத்திடவும், கூட்டம் தொடர்பான அறிக்கையினை இவ்வியக்ககத்திற்கு வரும் அக்டோபர் 12- ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது". இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT