ADVERTISEMENT

“எம்.ஜி.ஆர். சூட்டிய பெயரையே மாற்றும் அளவுக்கு காபந்து அரசு..” - மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம்

04:20 PM Apr 13, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னை பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை, ‘பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை’ எனப் பெயரிடப்பட்டிருந்தது. இதைத் தற்போது நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் ‘Grand Western Trunk Road’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்குப் பல்வேறு தரப்புகளிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துவருகிறது. இந்நிலையில், இதற்குக் கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், “தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலைக்கு பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலை என 1979-ல் பெயர் சூட்டினார் அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள். 40 ஆண்டுகளுக்கு மேலாக, தமிழகத்தில் ஆட்சி மாற்றங்கள் பல ஏற்பட்டபோதும் அந்தப் பெயரே நீடித்து வந்த நிலையில், தற்போது நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள பலகையில் Grand Western Trunk Road என எழுதப்பட்டிருப்பதும், நெடுஞ்சாலைத் துறை இணையதளத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருப்பதும் கடும் கண்டனத்திற்குரியதாகும்.

தமிழகத்தில் அ.தி.மு.க.வின் காபந்து சர்க்காருக்கு இன்னும் சில நாட்களே மிச்சமிருக்கும் நிலையில், இந்தத் திரிபு வேலைக்கான உத்தரவு எங்கிருந்து வந்தது? அ.தி.மு.க.வின் நிறுவனரான எம்.ஜி.ஆர். சூட்டிய பெயரையே மாற்றும் அளவுக்கு காபந்து அரசு, தனது டெல்லி எஜமானர்களின் கால் பிடிக்கும் அரசாக இருக்கிறதா? அல்லது, தந்தை பெரியார் பெயரைச் சொன்னாலே நடுநடுங்கும் மதவெறி சக்திகளின் அதிகார ஆட்டமா?

எதுவாக இருந்தாலும், மீண்டும் பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலை என உடனடியாக மாற்றம் செய்திட வலியுறுத்துகிறேன். தாமதம் செய்தால், மே 2-க்குப் பிறகு அதிகாரப்பூர்வ ஆணை வெளியாகும் நிலை ஏற்படும் என்பதை நினைவில் கொள்க” எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT