ADVERTISEMENT

மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தற்கொலை முயற்சி... தம்பதியை காப்பாற்றிய போலீசார்!

06:23 PM Aug 22, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 22 ந் தேதி நடைபெற்றது. இதற்காக மாவட்டத்தில் பல்வேறு பகுதியிலிருந்து வந்திருந்த மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் திரண்டிருந்தனர். அப்போது ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த கொங்கர்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுந்தரம் தனது மனைவி பாப்பாவுடன் மனு கொடுத்த வந்திருந்தனர். திடீரென அவர்கள் தங்கள் கையில் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெய் கேனை திறந்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனடியாக ஓடிச் சென்று அவர்களிடமிருந்த கேனை பறித்து வீசினார்கள். பின்னர் அங்கு தயாராக வைத்திருந்த தண்ணீரை அவர்கள் மீது ஊற்றினார்கள்.

இதுகுறித்து தீக்குளிக்க வந்த சுந்தரம் கூறும்போது, "நான் மேற்கண்ட எங்கள் ஊரில் குடியிருந்து வருகிறேன். கோபிசெட்டிபாளையம் தாலுகாவுக்கு உட்பட்ட கொங்கர்பாளையம் ஊராட்சி, இந்திரா நகர் பகுதியில் எனக்கு 82 சென்ட் நிலம் உள்ளது. இங்கு 1997 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை விவசாயம் செய்து வருகிறேன். எனக்கு படிப்பறிவு கிடையாது. இந்நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி எனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் எனது மனைவி வாணிபுத்தூரை சேர்ந்த ஒருவரிடம் 60 ஆயிரம் ரூபாய் கடன் கேட்டார். முதலில் அவர் கடன் தர மறுத்தார். அதற்கு என் மனைவி எனது பெயரில் உள்ள நில பத்திரத்தை அந்த நபரிடம் கொடுத்து கைரேகை வைத்து கடன் பெற்றார். இந்த 60,000 கடனுக்காக நாங்கள் இதுவரை 2 லட்சத்து 94 ஆயிரம் வட்டி கொடுத்து விட்டோம். ஆனால் அவர் எங்களிடம் வாங்கிய பாத்திரத்தை கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார். தற்போது திடீரென அந்த நபர் எங்கள் நிலத்தை வேறு ஒருவர் பெயரில் கிரையம் செய்து விற்று விட்டதாக கூறுகிறார்.

இதுகுறித்து அந்த நபரிடம் கேட்டபோது அவர் எங்களுக்கு கொலை மிரட்டல் கொடுக்கிறார். தற்போது வரை அந்த இடத்தில் நான் தான் விவசாயம் செய்து வருகிறேன். பின்னர் அந்த இடத்தை வாங்கியவரும் எங்களை மிரட்டத் தொடங்கினார். எங்களிடம் மோதினால் ஊரை விட்டு பஞ்சாயத்து மூலமாக தீர்மானம் போட்டு ஒதுக்கி விடுவோம் என்று மிரட்டுகின்றனர். இன்னும் ஒரு வாரத்தில் இடத்தை காலி செய்யவில்லை என்றால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டுகின்றனர். எனவே எங்கள் நிலத்தை மீண்டும் எங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

தீக்குளிக்க முயன்றதையடுத்து சுந்தரம் மற்றும் அவரது மனைவியை ஈரோடு சூரம்பட்டி போலீசார் விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. அதிகாரிகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக தீக்குளிப்பு போராட்டம் என்ற பெயரில் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் இது போன்ற சம்பவங்கள் தொடர்கிறது. இப்படி போராட்டம் நடத்தினால் தான் அரசு உடனடி கவனம் செலுத்தி பிரச்சனையை தீர்த்து வைக்கும் என ஊர் ஊருக்கு இருக்கும் சில ப்ளாக்மெயில் அமைப்புகள் சம்பந்தப்பட்டவர்களை தூண்டிவிட்டு தீக்குளிப்பு போராட்டத்தை ஊக்குவிக்கிறார்கள். அப்படிப்பட்ட தவறான அமைப்புகள், நபர்களை கண்டறிந்து இது சம்பந்தமாக உயர் போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறுகிறார்கள் பாதுகாப்பு பணியில் உள்ள போலீசார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT