ADVERTISEMENT

கேள்விக்குறியாகும் வாழ்வாதாரம்; கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள் - போராட்டத்தில் இறங்கிய மக்கள்

10:52 AM Dec 15, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரூர்-மணப்பாறை நெடுஞ்சாலையில் காணியாளம்பட்டி கிராம மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியத்திற்குட்பட்ட காணியாளம்பட்டி விவசாயம் நிறைந்த பகுதி. அந்தப் பகுதி மக்கள் விவசாயத்துடன் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இப்பகுதிகளில் தொடர்ந்து வெறிநாய்கள் ஒன்று சேர்ந்து ஆடு, மாடு, மனிதன் எனப் பார்க்காமல் கடித்து வருகின்றன. இதனால் பல கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. தொடர்ந்து வெறிநாய் தொல்லை அதிகரித்து இருப்பதால் இதனை அப்புறப்படுத்த கடவூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம் புகாரளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

சிறிது சிறிதாகச் சேமித்து விவசாயம் செய்தும், அதிலிருந்து வரும் வருமானத்தில் கால்நடைகளை வாங்கி மேய்த்தும் விவசாயிகள் வருமானம் ஈட்டி வரும் நிலையில், இன்றும் வெறிநாய் தொல்லையால் பத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்துள்ளன. இதுகுறித்து பலமுறை புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஆவேசப்பட்ட விவசாயிகள், வெறிநாய் தொல்லையால் தொடர்ந்து எங்களுடைய வாழ்வாதாரம் வீணாகி வருகிறது எனக் கூறி வெறிநாய் கடித்து இறந்த ஆடுகளுடன் கரூர்-மணப்பாறை நெடுஞ்சாலையில் உள்ள காணியாளம்பட்டியில் ஊர்ப்பொதுமக்களுடன் ஒன்றுகூடி மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, கடவூர் வட்டாட்சியர் மற்றும் குளித்தலை டி.எஸ்.பி. தலைமையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில் உடனடியாக வெறிநாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் சாலைமறியல் கைவிடப்பட்டது. இந்தப் போராட்டத்தால் கரூர்-மணப்பாறை சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் இந்தப் பகுதி கிராம மக்கள் ஒன்றுகூடி பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்திருக்கின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT