
கரூர் குளித்தலை மணப்பாறை செல்லும் சாலையில் உள்ள ரயில்வே கேட் தண்டவாள பகுதியில் ஏற்பட்டுள்ள பழுது நீக்கும் பணியின்போது பொதுமக்கள் தண்டவாளத்தில் படுத்து ரயில் மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் குளித்தலை-மணப்பாறை செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள ரயில்வே கேட் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் பழுது ஏற்பட்டதால் அதனை சரி செய்யும் பணிக்காக இன்று ரயில்வே கேட் காலை 10 மணிக்கு மூடப்பட்டு மாலை 4 மணிக்கு திறக்கப்படும் என காவல்துறை அறிவித்திருந்தது. அதனைத்தொடர்ந்து போக்குவரத்து அந்த வழியாக நிறுத்தப்பட்டு பணிகள் நடைபெற்றன. இந்தப் பணியில் நூற்றுக்கணக்கானோர் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், தெற்கு மணத்தட்டை பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ரயில்வே கேட் பகுதிக்கு வந்தனர். எங்கள் ஊருக்கு செல்லும் ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் சுரங்கப்பாதை பணி இன்னும் முடிவு பெறவில்லை. இதனால் பொதுமக்கள் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே பொதுமக்களை பாதிக்கும் சுரங்கப்பாதையை கைவிட வலியுறுத்தி அவர்கள் ரயில்வே கேட் பகுதிக்கு வந்து தண்டவாளத்தில் படுத்து ரயில் நிறுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு திடீரென பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதற்கு பிறகு பொதுமக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். இதனால் திருச்சியில் இருந்து சேலம் செல்லும் பாசஞ்சர் ரயில் திடீரென நிறுத்தப்பட்டது. ஐந்து நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது.