ADVERTISEMENT

ஆவணமின்றி யானை வைத்திருந்தவர்களுக்கு அபராதம்... வனத்துறை அதிரடி!

08:15 PM May 29, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நெல்லை மாவட்டத்தின் களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகம், அம்பை கோட்டம், கடையம் வனச்சரகத்திற்குட்பட்ட கோவிந்தபேரி பீட் வெளிமண்டலப் பகுதியின் பாப்பன்குளம் கிராமத்தில் தனியார் இருவர் யானை வைத்திருப்பதாக கடையம் வனச்சரக அலுவலகரான ராதைக்குத் தகவல் கிடைக்க, அவரது உத்தரவின் அடிப்படையில் வனகாப்பாளர் ரமேஷ் உள்ளிட்ட வனத்துறையினர் குறிப்பிட்ட பகுதிக்குச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் கேரளாவின் கோட்டயத்திலிருந்து பொட்டல் புதூர் கமிட்டிக்கு இனாமாகப் பெறப்பட்ட அந்த யானையை உரிய உரிம ஆவணமின்றி கொண்டுவந்தது தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து பொட்டல் புதூரைச் சேர்ந்த பீர்முகமது, பக்கர் இருவருக்கும் களக்காடு முண்டன்துறை புலிகள் வனக் காப்பக இயக்குநர் செண்பகபிரியாவின் உத்தரவின்படி, தலா 25,000 வீதம் 50,000 ரூபாய் அபராதம் விதித்தனர். இதனைப்போன்று உரிய அரசு ஆவணமின்றி வனஉயிரியல் இனமான யானையை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் என்கிறார்கள் வனத்துறையினர்.

அவர்களிடம் சில பேப்பர்கள் இருக்கின்றன ஆனால் தமிழக வனத்துறையின் உரிய அனுமதி இல்லை. எனவே யானை வந்த விதம் பற்றி விசாரணை நடத்தப்படுகிறது என்கிறார் வனச்சரக அலுவலகரான ராதை. கேரளாவில் யானைகளுக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம்.

கேரளாவின் கொல்லம் கோட்டயம், பத்தனம்திட்டா போன்ற பகுதிகளில் நாம் விசாரித்தபோது, கேரள மாநில சட்டப்படி யானையை வாங்குவதும் விற்பதும் குற்றம். தண்டனைக்குரியது. மாநில அரசால் கூட யானையை விற்க முடியாதாம். அந்த மாநில வனச் சட்டப்படி, யானையை வைத்திருப்பவர்கள் அரசால் வழங்கப்பட்ட உரிய லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும். மலைமுகடுகளைக் கொண்ட கேரளாவில் யானைகள் அதிகம் என்பதால் அவைகளைப் பாதுகாக்க வேண்டி நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன என்கிறார்கள். மேலும் ஒரு யானையின் விலையே சாதாரணமாக ஒன்றரை கோடியைத் தாண்டுமாம்.

மேலும் கோவில்களைக் கொண்ட கடவுள்களின் தேசமான கேரளாவில் யானைகளை அம்பாரி, ரத்தினம் பதித்த அங்கி கம்பளம் போன்ற சர்வ அலங்காரங்களுடன் அலங்கரித்து கோவில்களின் விழாவின் போது கொண்டு வரப்படுகிற அலங்கார யானைகளின் கம்பீர நடையைக் காண்பதற்கு கேரள மக்கள் ஆர்வம் காரணமாக அலை அலையாகத் திரள்வதுண்டு. திருக்கடவூர், திருச்சூர்பூரம், திருவாங்கூர் தேவசம் போர்டு ஆலயங்களின் திருவிழாக்களில் கலந்து கொள்கிற ஜோடிக்கப்பட்ட ஒரு யானையின் ஒரு நாள் வாடகையாக, 2 லட்சம், 3, 4 லட்சம் என்று யானையின் கம்பீர தோற்றத்திற்கு ஏற்ப தரப்படுமாம். இப்படி யானைக்கான வாடகைத் தொகை லட்சங்களில் கிடைப்பதாலேயே யானையை வைத்திருக்கும் தனியார்கள் சிலர் வியாபார நோக்கில் பயன்படுத்துவதும் உண்டாம். யானை இருந்தாலும், இறந்தாலும் ஆயிரம் பொன்தான் என்கிறது சொல்லாடல்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT