ADVERTISEMENT

“பாதை சரியானதே - இன்னும் வேகமாய் நடைபோடுவோம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

08:04 PM Mar 12, 2024 | prabukumar@nak…

தமிழக மாநில திட்டக்குழுவின் துணைத் தலைவர் ஜெயரஞ்சன் இன்று (12.03.2024) தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து மாநில திட்டக்குழுவில் கடந்த நான்கைந்து மாதங்களில் நாம் மேற்கொண்ட ஆய்வுப் பணிகள் குறித்த மொத்தம் 11 அறிக்கைகள் வழங்கியிருக்கிறோம். அந்த அறிக்கைகளை நான்கு வகைப்படுத்தலாம். ஒரு வகை என்னவென்றால் அரசின் திட்டங்கள் எப்படி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை ஆய்வு செய்து அதற்குண்டான அறிக்கையை அரசுக்கு அளிப்பது. பொதுவாக அரசின் திட்டங்கள் அது எப்படி நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கான ஆய்வு. அதற்குப் பிறகு அரசு மாறி வரும் கால சூழலில் என்னவெல்லாம் நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்பது பற்றியும் தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், பயனாளிகள், பயனாளிகளின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் இந்தத் திட்டத்தைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பது பற்றி முதல் ஆய்வு ஆகும்” எனத் தெரிவித்திருந்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில் இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வயிற்றுப் பசியுடன் வரும் குழந்தைக்கு அறிவுப்பசி எங்ஙனம் ஏற்படும்? துடைத்தெறிவோம் அப்பசியை நாளைய தலைமுறை நலமாக என முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் கொண்டு வந்தோம். மாணவர்களின் வருகை அதிகரிப்பு, குடும்பத் தலைவிகளின் பணிச்சுமைக் குறைப்பு என அதன் பலன்களை இன்று மாநிலத் திட்டக்குழுத் துணைத் தலைவரும், பொருளாதார அறிஞருமான முனைவர் ஜெ. ஜெயரஞ்சன் அடுக்கடுக்காய்ப் பட்டியலிட்டபோது, நம் பாதை சரியானதே - இன்னும் வேகமாய் நடைபோடுவோம் என்ற உற்சாகம் பிறந்தது” எனக் குறிப்பிடுள்ளார். இதற்கான காணொளி ஒன்றையும் இணைத்துள்ளார்.

ADVERTISEMENT

அதில், “காலை உணவுத் திட்டத்தினால் பள்ளிக்கூடங்களில் 100 சதவிகித சேர்க்கைக்கு வந்துவிட்டோம். புதிதாக சேர்ப்பது என்பது பெரிய விஷயம் கிடையாது. இப்போது என்ன பிரச்சனை என்றால், வருகைப் பதிவு என்பது முன்பு 60 சதவீதம். 70 சதவீதம் சாதாரணமாக இருக்கும். காலை உணவுத் திட்டம் வந்த பிறகு, சாதாரணமாக 90 முதல் 95 சதவீதம் ரொம்ப சுலபமாக இருக்கிறது. இரண்டாவதாக, பள்ளிக் குழந்தைகள் பள்ளிக் கூடத்திற்கு போகமாட்டேன் என்று அடம் பிடிப்பதில்லை. குழந்தைகள் 9 மணிக்கு பள்ளிக்கூடம் என்பது தற்போது 7.30 மணி முதல் 8 மணிக்குள் பள்ளிக்கூடம் செல்வது சர்வ சாதாரணமாக நடந்து கொண்டிருக்கிறது. மூன்றாவதாக, குழந்தைகள் காலை உணவை விரும்பி சாப்பிடுவதாக பெற்றோர்களும், ஆசிரியர்களும் சொல்கிறார்கள். ஆசிரியர்கள் சொல்லக்கூடிய விஷயம் என்னவென்றால், குழந்தைகள் மிகவும் சோர்வாகவும், மயக்கத்தோடும் தற்போது எதுவும் இல்லை என்று சொல்கிறார்கள். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், குழந்தைகள், பள்ளிக்கூடத்தில் தரும் உணவு போல ஏன் வீட்டில் தருவதில்லை என்று பெற்றோர்களிடம் கோரிக்கை வைக்கிறார்கள். பெற்றோர்கள், குழந்தைகள் அதை சொல்வதாக சொல்கிறார்கள்.

இதற்கு முன்பு ஒரு ஆய்வு செய்தோம். அதனுடைய தாக்கம் எப்படி இருந்தது என்றால் மிகவும் குறிப்பிடத்தக்க அளவில் வருகைப் பதிவு அதிகரிப்பது என்பது அந்த தரவிலிருந்து தெரிகிறது. அதையும் மாநில திட்டக் குழுவின் மூலமாக ஆய்வு செய்து கூறினோம். தற்போது ஆரம்ப மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளபடி, அரசு உதவி பெறும் பள்ளிக் கூடங்களுக்கும் இந்தத் திட்டம் விரிவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக தாய்மார்களிடம் இருந்து பெரிய வரவேற்புப் பெற்றிருக்கிறது. காலை எழுந்தவுடன் குழந்தைகளை எழுப்பி, சாப்பாடு வழங்கி அவர்களை பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவது என்பது ஒரு தனி வேலை. அந்த வேலையிலிருந்து பெரிய அழுத்தத்திலிருந்து விடுதலை ஆகிவிட்டோம் என்பது பெற்றோர்கள் கூறும் கருத்து. இரண்டாவதாக, குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கு சந்தோஷமாக செல்கிறார்கள். இவை இரண்டும் தான் மிகவும் குறிப்பாக சொல்ல வேண்டிய கருத்து. மூன்றாவதாக, குழந்தைகள் சாப்பிட்டார்களா, சாப்பிடவில்லையா என்பது பெற்றோர்களின் கவலையாக இருந்தது. இப்போது அந்த கவலை இல்லை என்று சொல்கிறார்கள். தற்போது, நிம்மதியாக இருப்பதாக கூறுகிறார்கள். இவையெல்லாம் ஆய்வு செய்ததிலிருந்து கிடைத்திருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT